prostitution in Puducherry: புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் சனிக்கிழமை (அக்.7) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு முழுவதும் சீரழிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் ரெஸ்டோபார், மசாஜ் கிளப்புகள், ஸ்பா, பப் மற்றும் கேபரா டேன்ஸ், விபசாரம் எந்த விதமான தங்கு தடையும் இன்றி நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் ஆளும் கூட்டணி அரசு குறிப்பாக ஒரு கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் சமுதாய சீர்கேடுகளை உருவாக்கம் விதத்தில் தாங்கள் நடத்தும் மதுபான கூடங்களில் பெண்கள் சம்பந்தமான விபச்சாரங்களை தடை இன்றி நடத்தப்பட்டு வருகிறது. பல தனியார் பள்ளிகளில் படிக்கின்ற இளம் மாணவிகளை குறிவைத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் தொடர்பு கொண்டு அந்த பெண்களை ஏமாற்றி துன்புறுத்துதல் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினால் விசாரிக்கப்பட்டதில் ஒரு பெண் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் தாம் படிக்கும் பள்ளிக்கூடத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறாக துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்து தங்கி படிக்கும் மாணவ மாணவிகள், வெளியூரிலிருந்து வந்து வேலை பார்க்கும் பெண்கள் என பல பெண்களை குறி வைத்து சுற்றுலா போர்வையில் சிலர் அவர்களை அணுகி அவர்களை தவறான பாதையில் அழைத்துச் சென்று விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைக்கு அப்பாவி பெண்களை ஏமாற்றியும், அவர்களின் வறுமையை பயன்படுத்தி தேவைகளை பூர்த்தி செய்து தவறான பாதையில் கொண்டு செல்கின்றனர்” என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, 'பெரிய மார்க்கெட் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்படும் என கடந்த ஐந்து மாதங்களாக சொல்லி வருகின்றனர். ஆனால் இதுவரை போடப்படவில்லை. யார் இதை தடுக்கிறார்கள். அரசு ஏன் மெத்தனம் காட்டுகிறது என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணி என்ற பெயரில் அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து இவர்கள் அடிக்கும் நாடகம் தெரிந்தும் ஏன் அரசு மவுனம் காக்கிறது என தெரியவில்லை” எனக் கேள்வியெழுப்பினார்.
இந்தப் பேட்டியின் போது மாநிலக் கழக அவை தலைவர் அன்பானந்தம், மாநிலக் கழக இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், ஆர்.வி திருநாவுக்கரசு, மாநில துணை செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“