சென்னையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேரறிஞர் சி.என். அண்ணாதுரை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக கூட்டணி கட்சியான அ.தி.மு.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் ஜெயக்குமார், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை என அறிவிப்பதாக கூறினார். இது தமிழக அரசியல்களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இவ்விவகாரத்தில் இரு கட்சிகளின் தலைமையும் மௌனம் காத்துவருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க மூத்த தலைவர்கள் குழு வெள்ளிக்கிழமை டெல்லி சென்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியாத நிலையில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும், தமிழகப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்து, இவ்விவகாரம் தொடர்பாக பேசினர். தொடர்ந்து தலைமை தலையிட்டு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியதாக கூறப்படுகிறது. மேலும் இது நடக்காவிட்டால் தமிழக பா.ஜ.க தலைவரை மாற்ற வேண்டும் என அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி கூறுகையில், அண்ணாமலை கட்சிக்கு புத்துயிர் அளித்து, அதன் அடித்தளத்தை விரிவுபடுத்தி வருவதால், அவரை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை எங்கள் தலைமை விரும்பவில்லை. மாநிலத்தில் சனாதன தர்மம் தொடர்பான பிரச்சனையில் தான் அவர் அண்ணாதுரையை குறிப்பிட்டு பேசினார் என்று தெரிவித்தார்.
அண்ணாதுரையின் சித்தாந்தத்தை கட்சி பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், கட்சியின் மூலம் அவரது பெயரை நிலைநிறுத்துவதாகவும் அதிமுகவின் கொடியில் அவரது உருவம் இடம் பெற்றுள்ளதாக அதிமுக மூத்த தலைவர் ஒருவர் வலியுறுத்தினார்.
மேலும் அதிமுக மூத்த தலைவர் கூறுகையில், இருப்பினும், இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. இது பாஜக தலைமையுடன் பிரச்சனைகளை எடுத்துச் செல்ல எங்களுக்கு உதவியது," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கூட்டணி குறித்து மத்திய தலைமைதான் இறுதி முடிவை எடுக்கும் என்று பாஜக மகிளா மோர்ச்சா தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் மாநில அமைச்சர்கள்: எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டெல்லியில் நட்டா மற்றும் கோயலை சந்தித்து பேசினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.