புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து தரமற்ற மருந்துகள் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ராஜீவ்சிங் ரகுவன்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசு நாட்டு மக்களுக்கு பக்க விளைவுகளையும், உயிருக்கு அச்சுறுத்தல், அலர்ஜியை ஏற்படுத்தும் 156 வகையான காக்டெயில் மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. உயிரை காப்பாற்ற வேண்டிய மருந்துகள் உயிரை குடிக்கும் விஷமாக மாறிவிடக்கூடாது. ஆனால் புதுச்சேரியில் துரதிர்ஷ்டவசமாக இந்த நிலைதான் நீடித்து வருகிறது.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று ஏழை தொழிலாளியின் ஒன்றரை வயது குழந்தைக்கு காலாவதியான மருந்து வழங்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மாநில மக்களிடையே பீதியையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வசதியில்லாத ஏழை எளிய, நடுத்தர மக்கள்தான் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். அங்கும் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையை அரசே ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மருந்து மாபியா கும்பலின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் போலி மருந்துகள் உற்பத்தி செய்யும் கேந்திரமாக விளங்குகிறது. புதுச்சேரி மாநிலத்திலிருந்து போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. போலி மருந்துகளோடு, காலாவதியான மருந்துகள் விற்கப்படுகிறது. புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் போலி மருந்துகள் பலரின் உயிரை குடிக்கும் அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது.
எனவே, புதுச்சேரி மாநிலத்தில் மருந்து விநியோகத்தில் நிலவும் முறைகேடுகள் அனைத்தையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் எத்தனை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன? அவற்றில் சட்டப்படி மருந்துகள் தயாரிக்கப்படுகிறதா? போலி மருந்துகள் தயாரிக்கப்படுகிறதா? போலி மருந்துகள் எங்கு விற்கப்படுகிறது? காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளனவா? என முழுமையான விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரி மாநில மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் விநியோகம் செய்யப்படும், தனியார் மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துகள் தரமானவையா? என முழு ஆய்வு நடத்த வேண்டும்.
புதுச்சேரி மாநில அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதால், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு குழு மூலம் நேரடி சோதனை, ஆய்வு நடத்திட வேண்டும் என புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” என்று வையாபுரி மணிகண்டன் கடிதம் எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“