/tamil-ie/media/media_files/uploads/2023/07/Puducherry-ADMK-Anbazhagan.jpeg)
தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியிலும் திமுகவினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என புதுவை அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாநிலக் கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை செய்து வருகிறோம். அதன் ஒரு தொடர்ச்சியாக அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
பாரதியார் பல்கலைக்கூடம் சீரழிந்து போய் உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள கடற்கரை பகுதிகள் தனியாரால் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் துணையோடு சூரையாடப்பட்டு வருகின்றன.
பல தனியார் ஓட்டல்கள் புதிது புதிதாக ஆரம்பிக்கப்பட்டு கடற்கரை பகுதி முழுவதும் தற்காலிக வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கஞ்சா செடி வளர்த்து கஞ்சா விற்பனை கூடமாக இந்த தொகுதி மாற்றப்பட்டுள்ளது. இளைஞர்கள் வாழ்வு முழுமையாக சீரழிக்கப்பட்டு வருகிறது.
அரசு வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு வருகிறது. சென்டாக் மாணவர் பிரச்சனையில் சென்டாக் நிர்வாகம் குளறுபடிகளை செய்ததால், 441 மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை 30-09-2023-க்குள் முடிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்திருந்தது.
ஆனால் சென்டாக் நிர்வாகம் தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்திருந்த இறுதி தேதிக்கு பிறகு சுமார் 450 மாணவர்களை மருத்துவ கல்வியில் சேர்த்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியிலும் திமுகவினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வருங்கால முதலமைச்சர் என திமுக அமைப்பாளர் தன்னை மார்தட்டிக்கொண்டு எந்த மக்கள் நல பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துவது கிடையாது.
திமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா அவர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகையில் தடுப்புகள் ஏன் போடப்படுகிறது. அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியது போன்று இங்கு தடுப்புகள் இருப்பதால் வீச முடியவில்லை என்ற ஆதங்கத்தில் சிவா அவர்கள் தடுப்புகளை எடுக்க சொல்கிறார் போல் தெரிகிறது.
தடுப்புகள் எடுக்கப்பட்டால் நிச்சயமாக துணைநிலை ஆளுநர் மீது திமுகவினர் பெட்ரோல் குண்டுகளை வீசி தங்களின் இருப்புகளை தெரிவித்துக்கொள்வார்கள். எனவே பாதுகாப்பிற்காக தற்போது உள்ள தடுப்புகளை அரசு அகற்ற கூடாது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.