புதுச்சேரியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
“2009-ம் ஆண்டு (Article 21A) நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010-ம் ஆண்டு நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தது. ஜெயலலிதா ஆட்சியின் போது தமிழகத்தில் 08-11-2011-ல் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அ.தி.மு.க ஆட்சியிலும் இச்சட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தில் தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய் உள்ள 25 சதவீத மாணவர்கள் இந்த சட்டத்தின் மூலம் இலவச கல்வி பெற முடியும்.
இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தனியார் பள்ளிகளில் மொத்தமுள்ள மாணவர்கள் எண்ணிக்கையில் சுமார் நாற்பதாயிரம் ஏழை எளிய மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற முடியும். இச்சட்டத்தை அமுல்படுத்துவதால் எந்த தனியார் பள்ளிக்கும் எவ்வித நஷ்டமும் இல்லை. இச்சட்டத்தின் படி பயன்பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 65 சதவீதம் மத்திய அரசும், 35 சதவீதம் மாநில அரசும் கட்டணங்களை ஏற்க வேண்டும்.
இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கு என தனியாக கல்வி வாரியம் இல்லாத நிலையில், பள்ளி கல்வியில் முழுமையாக தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி அரசு இதுவரை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாதது ஏழை எளிய மாணவர்களை வஞ்சிக்கும் செயலாகும். கடந்த தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியில் மக்கள் விரோத ஆட்சி நடத்தியவர்கள் இச்சட்டத்தை 2021 வரை அமல்படுத்தவில்லை.
தற்போது என். ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தும் மத்திய அரசின் இச்சட்டத்தை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமுல்படுத்தாமல் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது.
தமது பிள்ளைகள் தரமான கல்வி பயில வேண்டும் என்ற பெற்றோர்களின் நியாயமான எண்ணங்களை பல தனியார் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மனம் போன போக்கில் பல்வேறு தலைப்புகளில் கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தி வசூலிக்கின்றன.
100 சதவீத தேர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காக சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை மனதளவில் வதைத்து வருகின்றனர். மேலும், கல்வித்தரம் குறைவாக உள்ள மாணவர்கள் 9-வது வகுப்பில் தேர்ச்சியடைந்தாலும் படிப்பில் பலவீனமாக உள்ளதாக கூறி தங்களது பள்ளிகளின் மூலம் 10-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்காமல் தனித்தேர்வு மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுத வைக்கின்றனர்.
இந்தியாவிலேயே எல்.கே.ஜியில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் தனியார் பள்ளிகளின் உரிமையாளராக இருப்பதால் அரசின் சட்ட திட்டங்களை எந்த தனியார் பள்ளியும் பின்பற்றுவதே இல்லை. மத்திய அரசால் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு அமுல்படுத்தாமல் இருப்பது அரசின் சட்டவிரோத செயலாகும்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் இதற்கான அரசாணையை இன்றுவரை வெளியிடாமல், மத்திய அரசின் இந்த சட்டத்தையே புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு அவமதித்து வருகின்றன.
சமூக சமுதாய நலனில் அதிக அக்கரை செலுத்தும் துணைநிலை ஆளுநர் இந்த கல்வியாண்டில் புதுச்சேரி மாநிலத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமுல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அ.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் ஜி. தமிழ்வேந்தன் ஆகியோர் இருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“