/indian-express-tamil/media/media_files/2025/08/15/resto-bar-2025-08-15-07-49-46.jpg)
புதுச்சேரியில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி மியூசிக்கல், ஆட்டம், பாட்டம் கும்மாளத்துடன் நள்ளிரவு வரை நடைபெறும் ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாநில கழக அவைத் தலைவர் ஜி அன்பானந்தம் ,மாநில அம்மா பேரவை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ரெஸ்டோ அவர்களை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது கலெக்டர் அலுவலக அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்து இன்றுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட டூரிஸ்ட் எஃப்.எல்-2 லைசன்ஸ் கலால் துறையால் வழங்கப்பட்டுள்ளது.
சமைத்த உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ரெஸ்டாரெண்டுகளிலும், புதிதாக கட்டப்படும் ரெஸ்டாரண்டுகளில் உணவு சாப்பிட வருபவர்களுக்கும் மதுபானம் விற்பனை செய்ய கலால் துறையால் டூரிஸ்ட் எஃப்.எல்-2 லைசன்ஸ் வழங்கப்படுகிறது. டூரிஸ்ட் எஃப்.எல்-2 லைசன்ஸ் உள்ளவர்கள் இரவு 12 மணி வரை ரெஸ்டாரன்ட் மது விற்பனையும் செய்து கொள்ளலாம் என கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது. மதுபானம் விற்பனை செய்ய உரிமை பெறாத ரெஸ்டாரண்டுகள் இரவு 11 மணிக்குள் மூடி விட வேண்டும் என அரசின் உத்தரவு உள்ளது.
சமைத்த உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ரெஸ்டாரண்டுகளில் மதுபான விற்பனைக்கு அனுமதி பெற்றவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இரவு 12 மணி நேரத்துக்கு மேலாக அதிகாலை 3 மணி அல்லது 4 மணி வரை ரெஸ்டாரண்டுகள் திறந்து நடத்துகின்றனர்.
ரெஸ்டாரண்டில் மதுபானம் விற்பனை செய்ய கலால்துறையால் உரிமை பெற்றவர்கள் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி ஆட்டம், பாட்டம், மியூசிக்கல் டான்ஸ், டிஜே என்ற ஆண், பெண் இருவர் அரைகுறை ஆடையுடன் மியூசிக்குக்கு தகுந்தார் போல் நடனம் ஆடுவது, தனிப்பட்ட பெண்களும் நடனம் ஆட வைப்பது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அதிகாலை வரை நடத்துகின்றனர்.
அவ்வாறு கடந்த 9-ஆம் தேதி இரவு அதிகாலை 1.30 மணிக்கு மிஷன் வீதியில் உள்ள மதுபானம் விற்பனை செய்யும் ரெஸ்டாரண்டில் அரசின் அனுமதியின்றி நடைபெற்ற ஆண் பெண் அரைகுறை நாட்டியத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மதுபான விற்பனை செய்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுபோன்று விரும்பத்தகாத பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளும், மத வழிபாடுகள், பள்ளிகள், பிரதான சாலைகள் போன்ற இடங்களில் கலால் விதிகளுக்கு புறம்பாக ரெஸ்டாரண்டுகளில் மதுபானம் விற்பனை செய்ய டூரிஸ்ட் எஃப்.எல்-2 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வீடுகளில் வசிக்கும் மக்கள் ஆட்டம் பாட்டம் மியூசிக்கல் சத்தத்துடன் தங்களது நிம்மதியிலிருந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுவாக திறந்த வெளியிலும் அல்லது கட்டிடத்திற்குள்ளும் கிளாசிக்கல் மியூசிக் மற்றும் மது அருந்திவிட்டு ஜோடி ஜோடியாக இசைக்கேற்ப அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடுவது மற்றும் அநாகரீக அந்நிய பாட்டு இசைக்கேற்ப நடனம் ஆடுவது இதற்கெல்லாம் காவல்துறை, கலால் துறை, முனிசிபாலிட்டி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட ஏதாவது ஒரு துறை அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால் மேற்கூறிய எந்த துறையிடமும் அனுமதி பெறாமல் சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் துணையோடும், காவல்துறையின் ஒத்துழைப்போடும் மதுபானம் விற்பனை செய்யும் அனைத்து ரெஸ்ட் அப்பார்கலிலும் தினசரி சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன.
ஒரு விஷயத்தில் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுத்துறைகள் தங்களது கடமையை செய்ய தவறினால். அதன் மூலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த விஷயத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டிய காவல்துறை, கலால் துறை, உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் போன்ற துறைகள் தங்கள் கடமையை செய்யாமல் வேடிக்கை பார்க்கும் போது அத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.
மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ரெஸ்டாரண்டுகளில் அரசின் எந்தத் துறையின் அனுமதியும் பெறாமல் ஆட்டம், பாட்டம், மியூசிக்கல் டான்ஸ் நடத்தப்படும் ரெஸ்டாரண்டுகளில் மதுபானம் விற்பனை செய்யும் உரிமைத்தை கலால் துறை ரத்து செய்ய வேண்டும். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கையை மக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.கசார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.