/indian-express-tamil/media/media_files/2025/05/06/Grby9agjjsl8yM6Cbn6F.jpg)
சாத்தான் ஏதோ வேதம் ஓதுவது போன்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகிறார் என்று அவரையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடி இருக்கிறார் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன்.
அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி தவறான தகவல்களை நேரத்திற்கு ஏற்ப பேசகூடிய பேச்சையும் நிறுத்திக் கொள்வது நல்லது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தான் முதலமைச்சராக பதவி ஏற்கும் போது குறுக்கு வழியில் அப்போதைய தெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாரிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்து அவரது ராஜினாமாவை விலைக்கு வாங்கினார். அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் ரேஷன் கார்டுக்கு 2000 ரூபாய், ஒரு வாக்கு சீட்டுக்கும் நான்காயிரம் ரூபாயும் கொடுத்து வெற்றி பெற்றார்.
தற்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும், ஓட்டுக்கு பரிசு அட்டை கொடுப்பதையும் தவறு என சாத்தான் ஏதோ வேதம் ஓதுவது போன்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகிறார். அதேபோல் முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் கமிஷன் பெற்றுக்கொண்டு தரமற்ற அரிசியை மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் வெகுண்டெழுந்து அவரது வீட்டின் முன்னாலேயே அந்த தரமற்ற அரிசியை கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதை மறந்து விட்டார். தற்போது கூட அரசால் விநியோகம் செய்யக்கூடிய அரிசின் விலை சுமார் ரூ.48.50 இருக்கும். ஆனால் அரசு ரூ.80 கொடுத்து அரிசியை கொள்முதல் செய்வதாக பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். இதற்கு அரசு சார்பில் உரிய பதில் அளிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் கோடை காலத்தில் கட்டுமான தொழிலில் பொரும்பான்மையோர் ஈடுபடுவர். இந்த சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி கட்டுமான பொருட்களின் விலையை தாறுமாறாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால் இதை அவர்கள் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவருக்கு இந்த விலை ஏற்றம் தெரியுமா என்று தெரியவில்லை.
புதுச்சேரி அரசு மக்களுக்கு குறைந்த விலையில் நேர்மையான விலையில் தரமான கட்டுமான பொருட்கள் வழங்குவதற்கு அரசு சார்பில் பல்வேறு கட்டுமான சொசைட்டிகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உருவாக்கப்பட்ட கட்டுமான சொசைட்டி இன்று அரசின் தவறான கொள்கை முடிவுகளால் அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கட்டுமான பொருட்களின் விற்பனையாளர்கள் தங்களது பொருட்களின் விலையை மனம் போன போக்கில் உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு ரூ.250 விற்பனை செய்யப்பட்ட அல்ட்ரா டெக் சிமெண்ட் தற்போது மூட்டை ரூ.369-க்கும், ரூ.260-க்கு விற்கப்பட்ட டால்மியா சிமெண்ட் ரூ. 340-க்கும், ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்ட ராம்கோ சிமெண்ட் ரூ.350-க்கும் என ஒரு மூட்டைக்கை ரூ.100 விலை உயர்த்தி விற்கின்றனர்.
அதே போன்று கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஒரு யூனிட் ரூ.4500-க்கு விற்பனை செய்யப்பட்ட எம் சாண்டு ரூ.1500 உயர்த்தி ரூ.6,000-க்கும், மேலும் ரூ.6000 விற்பனை செய்யப்பட்ட பி சாண்டு ஒரு யூனிட் ரூ.7,000-க்கும், ரூ.3,200-க்கு விற்பனை செய்யப்பட்ட முக்கால் ஜல்லி ரூ.1,100 உயர்த்தப்பட்டு ஒரு யூனிட் ரூ.4,300-க்கும், ரூ.3,200-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒன்றரை ஜல்லி ஒரு யூனிட் ரூ.4,300-க்கும் என தாறுமாறாக விலை உயர்த்தப்பட்னு விற்பனை செயயப்படுகிறது.
இந்த விலையேற்றத்தை தடுத்து விலை உயர்வை கட்டுக்கள் கொண்டுவர வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது மக்களுக்கெ இழைக்கும் அநீதியாகும். எனவே மாண்புமிகு முதலமைச்சர அவர்கள் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் கூட்டத்தை கூட்டி கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்..
இந்தப் பேட்டியின் போது மாநில கழக இணைச்செயலாளர் திருநாவுக்கரசு, மாநில துணைச் செயலாளர் நாகமணி, மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.