Advertisment

இரட்டை இலை வழக்கில் இடைக்கால உத்தரவு கிடையாது: தேர்தல் கமிஷன் திட்டவட்டம்!

இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் இறுதி உத்தரவு மட்டும் தான். குறுக்கு விசாரணைக்கு அனுமதி வழங்க முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updatesதேர்தல் ஆணையம்

Tamil Nadu news today live updates

அ.இ.அ.தி.மு.கவின்  இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த முதற் கட்ட விசாரணை கடந்த 6-ஆம் தேதி இந்திய தேர்தல் அதிகாரி எ.கே.ஜோதி தலைமையில் தொடங்கியது. இரண்டாம் கட்ட விசாரணை 13ம் தேதி நடந்தது. 3ம் கட்ட விசாரணை கடந்த 23ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர், இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை அக்., 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisment

அதன்படி,  4–வது கட்ட விசாரணை தேர்தல் கமி‌ஷனில் நேற்று (அக்.,30) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஏ.கே.ஜோதி, கமி‌ஷனர்கள் ஓம்பிரகாஷ் ராவத், சுனில் அரோரா ஆகியோர் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினரும் ஆஜரானார்கள்.

சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி தன்னுடைய வாதத்தில், 'எதிர்தரப்பினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் நாங்கள் எதிர்பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையின் அடிப்படையான அம்சங்கள் குறித்து விரிவாக வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். இரு அணிகளுக்கு இடையே இந்த பிரச்சினை தொடங்கியபோது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

சசிகலா அணியின் மற்றொரு வக்கீல் விஜய் அன்சாரியா, 'எதிர்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பலரும் மிரட்டப்பட்டுள்ளனர். எனவே இவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். இதற்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். அணியின் ஒருங்கிணைந்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விஜய் அன்சாரியா, 'எதிர்தரப்பில் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் சசிகலாவுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் மட்டுமே தேர்தல் கமி‌ஷனில் உள்ள வழக்கில் பங்கேற்க உரிமை உள்ள தரப்பினர் ஆவர். மற்ற யாருக்கும் இதில் உரிமை எதுவும் இல்லை. செப்டம்பர் மாதம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அவற்றை மறுஆய்வு செய்ய வேண்டும். அதில் கையெழுத்திட்டுள்ள சிலரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு இடைக்கால உத்தரவை தேர்தல் கமி‌ஷன் பிறப்பிக்க வேண்டும்' என்று வாதாடினார்.

இதற்கு தேர்தல் கமி‌ஷன், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் குறுக்கு விசாரணைக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் கூறியது.

ஐகோர்ட்டு வக்கீல் உப்தேர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கையெழுத்திட்ட 5 பேர் இங்கே ஆஜராகி இருக்கிறார்கள். அவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியதையும் தேர்தல் கமி‌ஷன் ஏற்க மறுத்தது. இந்த 5 பேரும் தங்களுடைய மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் கூறியது.

இதனைத்தொடர்ந்து இருதரப்பிலும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. சசிகலா தரப்பிலேயே தொடர்ந்து வாதங்கள் செய்துவந்ததால் நேற்று ஒருங்கிணைந்த அணியினர் தரப்பில் வாதங்களை முன்வைக்க நேரம் கிடைக்கவில்லை என்று மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் முறையிட்டார். எனவே, வழக்கின் மீதான 5–வது கட்ட விசாரணையை நாளை (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு தேர்தல் கமி‌ஷன் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், நாளை நடைபெறும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் பங்கேற்க டிடிவி தினகரன் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment