நாடு முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பி.டெக் மற்றும் எம்.டெக் இடங்களை வரும் கல்வியாண்டில் குறைக்க அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) திட்டமிட்டுள்ளது.
வருடா வருடம் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் அந்தத் துறையிலேயே வேலைக் கிடைப்பதில்லை. ஏன், குறைந்தபட்சம் வேறொரு துறையில் கூட நல்ல வேலைகளை அவர்களால் அமைத்துக் கொள்ள முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம், அவர்களை சரியாக கட்டமைக்காத கல்வி நிறுவனங்கள் தான். இந்நிலையில், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்வி நிறுவனங்கள் பெருகுவது உள்ளிட்ட காரணங்களால், பொறியியல் இடங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இந்தச் சூழ்நிலையில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பி.டெக் மற்றும் எம்.டெக் இடங்களை குறைக்கும் ஏ.ஐ.சி.டி.இ. திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 24,000 பொறியியல் இடங்களை கொண்டுள்ள 83 கல்வி நிறுவனங்கள், நிரந்தரமாக மூடுவதற்கு அனுமதி கேட்டு ஏ.ஐ.சி.டி.இ.யிடம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சில பொறியியல் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி 450 கல்லூரிகள் அனுமதி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.