தற்போதைய கோவிட் -19 அலையில் பல நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல் அளவு குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற நிலையில், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, கண்மூடித்தனமாக ஸ்டீராய்டுகளை பரிந்துரைப்பதை எதிர்த்து திங்கள்கிழமை எச்சரித்துள்ளார். மேலும், லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சி.டி ஸ்கேன் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வது குறித்தும் எச்சரித்துள்ளார்.
கோவிட் -19-ன் தேசிய பணிக்குழுவின் உறுப்பினரான குலேரியா பயனுள்ள மருத்துவ மேலாண்மை பற்றி பேசுகையில், ஸ்டீராய்டுகளை உட்கொண்ட லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகளை மருத்துவமனைகள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், அது வைரஸ் பெருக்கமடைவதை தூண்டுவதாகவும், ஆக்ஸிஜன் அளவு குறைவை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
மருத்துவ உதவியை நாடும் நோயாளிகளை கருத்தில்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவ மாணவர்களின் சேவைகளை வழங்குவது உள்ளிட்ட ஆதாரங்களை அதிகரிப்பது தொடர்பாக திங்கள்கிழமை அவசரமாக ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
“ஆரம்ப கட்டத்தில் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது வைரஸ் பெருக்கத்துக்கு அதிக தூண்டுதலை அளிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில், லேசான தொற்றுகள் கடுமையாகி வருகின்றன. நோயாளிகள் கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். நோயின் முதல் ஐந்து நாட்களில் ஸ்டீராய்டுகளுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று குலேரியா கூறினார்.
மிதமான நோய்க்கு, மூன்று குறிப்பிட்ட சிகிச்சைகள் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், என்றார். “முதலாவது ஆக்ஸிஜன் சிகிச்சை; இரண்டாவதாக, நோய் மிதமானதாகவும், ஆக்ஸிஜன் செறிவு அளவு குறைவாகவும் இருக்கும்போது, ஸ்டீராய்டுகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது; மூன்றாவது (சிகிச்சை பயன்பாட்டில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எதிர்விளைவுகள். anticoagulants) ஏனென்றால், கோவிட்-19 நிமோனியா வைரஸ் நிமோனியாவிலிருந்து சற்று வித்தியாசமானது, அது ரத்தம் உறைவதை ஊக்குவிக்கிறது. நுரையீரலில் இரத்த உறைவு ஏற்படலாம். இதன் விளைவாக ரத்த செறிவு குறைகிறது. மீண்டும், லேசான நோயில், சிகிச்சை பயன்பாட்டில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எதிர்விளைவுகளுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று குலேரியா கூறினார்.
லேசான அறிகுறிகள் ஏற்பட்டால் செய்வதற்கு சி.டி ஸ்கேன் மற்றும் பயோமார்க்கர் பரிசோதனைகள் செய்வதற்கு எதிராக எய்ம்ஸ் இயக்குனர் குலேரியா அறிவுறுத்தினார். “நோயாளிகள் மிதமாக நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பயோமார்க்கர்களை தேவையற்ற முறையில் நம்பியிருப்பதால் அதிகப்படியான சிகிச்சைக்கு வாய்ப்பு உள்ளது” என்று குலேரியா கூறினார்.
தொற்று பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கு பல பேர் சிடி ஸ்கேன் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை மக்கள் ஸ்கேன் செய்வதை நாங்கள் பார்க்கிறோம். நாம் உடலை கதிர்வீச்சுக்கு வெளிப்படுத்துகிறோம். லேசான நோயில் சிடி ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை, அல்லது நீங்கள் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் இருக்கும்போது சாதாரண ஆக்ஸிஜன் அளவு இருக்கும்போது சிடி ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. அறிகுறியற்ற நோயாளிகளில் 30-40% பேர் சி.டி ஸ்கேன் செய்த பரிசோதனை அறிக்கைகளை காட்டுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த நோய்கள் எந்த சிகிச்சையும் இல்லாமல் தானாகவே குணமடைகின்றன” என்று மருத்துவர் குலேரியா கூறினார்.
சி.டி ஸ்கேன்களால் ஏற்படும் பிற ஆபத்துகளை சுட்டிக்காட்டும் குலேரியா, “ஒரு சிடி ஸ்கேன் 300-400 முறை மார்பு எக்ஸ்ரேக்கலை எடுப்பதற்குச் சமம். கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் மருந்தைக் கையாளும் சர்வதேச அணுசக்தியிலிருந்து தரவுகள் உள்ளது. சி.டி ஸ்கேன் பல முறை செய்யப்படுவதால் பிற்காலத்தில் குறிப்பாக இளைஞர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.” என்று கூறினார்.
எய்ம்ஸ் இயக்குனர் குலேரியா, பயோமார்க்கர்ஸ் பற்றி கூறுகையில், “கொரோனா தொற்று உறுதி என பரிசோதனை செய்பவர்கள் சி-ரியாக்டிவ் புரோட்டின் (சிஆர்பி), முழுமையான இரத்த எண்ணிக்கை, டி டைமர் ஆகியவற்றிற்கான ரத்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். லேசான நோய் உள்ளவர்களுக்கும் ஆக்ஸிஜன் செறிவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது, மீண்டும் இந்த ரத்த பரிசோதனைகள் தேவையில்லை. இவை பீதியடைவதற்கு மட்டுமே காரணமாகின்றன. இந்த பயோமார்க்கர்ஸ் கடுமையான எதிர்விளைவுகளுக்கானது. அதாவது வீக்கம் ஏற்படும் போதெல்லாம் இவை அதிகரிக்கும். தொற்று பரவுகிறதா என்பதை நாங்கள் அறியவில்லை. சிஆர்பி அதிகமாக இருந்தால் அவர்கள் ஸ்டீராய்டுகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.” என்று கூறினார்.
பிரதமர் மோடி நடத்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, நீட்-பிஜி தேர்வு குறைந்தது 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. “இது கோவிட் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான தகுதி வாய்ந்த மருத்துவர்களைக் கிடைக்கச் செய்யும்” என்று மத்திய அரசு கூறியது. மேலும், ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் டெலி-கலந்தாய்வு போன்ற கோவிட் பணிகளில் மருத்துவ பயிற்சியாளர்களை நியமிக்க அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 72 மணி நேரத்தில் கொரோனா தொற்றுகள் வீழ்ச்சியடைவதற்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து மத்திய அரசு பேசியது. ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களில் சிறிய மாற்றம் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. இருப்பினும், பல மாநிலங்கள் இன்னும் தினசரி தொற்றுகளில் அதிகரிப்பை காட்டி வருகிறது. 22 மாநிலங்களில் 15%க்கும் மேல் அதிகமாக தொற்று விகிதம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.