Somya Lakhani
எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் ஒருவர், சீனியர் ரெசிடென்ட் மருத்துவரிடம் 'உங்கள் நிலையை கவனத்தில் கொள்ளுங்கள் (மைன்ட் யுவர் லெவல் )' போன்ற சொற்களைப் பயன்படுத்தியதன் மூலம் ஜாதி மற்றும் பாலினப் பாகுபாடுகளை ரகசியமாக வெளிப்படுத்தியுள்ளார். உள் விசாரணைக் குழுவின் விசாரணை நியாயத்துடன் நடைபெறவில்லை, புகாரைத் திரும்பப் பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது”.
எய்ம்ஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான கமிட்டியின் கண்டுபிடிப்புகள் இவை.
எய்ம்ஸின் சீனியர் ரெசிடென்ட் மருத்துவர் "சாதி மற்றும் பாலின அடிப்படையில்" தான் பாதிக்கப்பட்டதாக பேராசிரியர் ஒருவர் மீது எய்ம்ஸ் எஸ்.சி., எஸ்.டி கமிட்டியில் புகார் அளித்திருந்தார்.
கமிட்டி தனது 17 பக்க அறிக்கையை ஜூன் 24 அன்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா விடம் சமர்ப்பித்தது, மருத்துவமனையின் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (சிடிஇஆர்) பணிபுரியும் அந்த பேராசிரியருக்கு எதிராக பொருத்தமான நிர்வாக / சட்ட நடவடிக்கை எடுக்கவும் கமிட்டி பரிந்துரைத்தது.
"குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக ஜாதி மற்றும் பாலினப் பாகுபாடுகளை வெளிப்படுத்தும் சொற்களை வெளிப்படையாக பயன்படுத்தவில்லை என்றாலும், 'பில்லி', 'உங்கள் நிலையை கவனத்தில் கொள்ளுங்கள் ' போன்ற சொற்களைப் பயன்படுத்தினார். இந்த சொற்கள் கேவலமானவை, இழிவானவை. பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழில்முறை திறன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு, மறைமுகமான சமூக பாகுபாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளார் ”என்று தி சண்டே எக்ஸ்பிரஸ் அணுகிய அறிக்கை குறிப்பிடுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் டெர்மட்டாலஜி, வெனராலஜி துறை பேராசிரியர் டாக்டர் கே .கே வர்மா இக்குழுவிற்கு தலைமை தாங்கினார். எய்ம்ஸ் நிறுவனத்தின் துணை இயக்குநர் (நிர்வாகம்) எஸ்.கே பாண்டா, இந்த அறிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
"கமிட்டி சில நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான சரியான செயல்முறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம், ”என்று சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி, சீனியர் ரெசிடென்ட் மருத்துவர் தனது விடுதி அறையில் மயக்க நிலையில் காணப்பட்டார். மார்ச் 16 அன்று நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான எஃப்.ஐ.ஆரில், “ கடந்த இரண்டு ஆண்டுகளாக பேராசிரியர் தனக்கு எதிராக பாகுபாடு காட்டி வருகிறார்… நான் சிடிஇஆர் தலைமை மருத்துவரிடம் புகார் செய்தேன். ஒவ்வொரு முறையும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுப்பதை தடுத்து நிறுத்தினர்” என்று தெரிவித்தார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் பொருத்தமற்ற சொற்களை பயன்படுத்தினார் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன… குற்றம் சாட்டப்பட்டவரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளார், சாட்சிகளும் இதனை உறுதி படுத்தியுள்ளன” என்று கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
சி.டி.இ.ஆரால் அமைக்கப்பட்ட உள் விசாரணைக் குழுவின் பங்கு குறித்து அறிக்கையில், “ நேர்மை, மரியாதை கவுரவத்துடன் விசாரணைக் குழு விசாரணையை நடத்தவில்லை. புகாரைத் திரும்பப் பெறுமாறு அழுத்தம் கொடுத்தன் மூலம், சமூகத்தின் பின்தங்கிய பிரிவில் இருந்து வந்த பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்காது என்ற உணர்வை உருவாக்கியது. தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டதன் விளைவாக, 17.04.2020 அன்று ஆன்ட்டி டிப்ரஷன் மாத்திரை உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ” என்று தெரிவித்தது.
"தனிமைப்படுத்தும் முயற்சியில் தொழில்முறை விஷயங்களில் பெண் மருத்துவருடன் தொடர்புகொள்வதை பேராசிரியர் ஆட்சேபித்தார்" என்று ஜூனியர் ரெசிடென்ட் மருத்துவர்கள் சாட்சியமளிப்பதாக அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
மார்ச் 22 ம் தேதி, ரெசிடென்ட் மருத்துவர்கள் அசோசியேஷன் எய்ம்ஸ் இயக்குனரை அணுகியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 16 அன்று சம்பவ இடத்தில் இருந்த சீனியர் ரெசிடென்ட் மருத்துவர், பேராசிரியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் அறிக்கைகளை இந்த கமிட்டி பதிவு செய்தது.
சீனியர் ரெசிடென்ட் மருத்துவர் தனது எஃப்.ஐ.ஆரில், மார்ச் 16 அன்று, "நோயாளிகள், ஊழியர்களுக்கு முன்னால் பேராசிரியர் தன்னை நோக்கி ஒழுக்கமற்ற மற்றும் ஜாதிப் பாகுபாடுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டினார். எனது இருக்கையிலிருந்து நான் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டேன்.... ஒரு கட்டத்தில் , நீங்கள் ஒரு எஸ்.சி , உங்கள் எல்லைக்குள் இருங்கள் (து எஸ்சி ஹாய், அப்னே லெவல் மெய்ன் ரெஹ்) என்றும் அவர் தெரிவித்தார் . பின்னர் தன்னை அழைத்து பேசிய சி.டி.இ.ஆர் தலைமை மருத்துவர்," பேராசிரியருடன் தவறாக நடந்து கொள்ளக்கூடாது" என்று தன்னை எச்சரித்ததாகவும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.