எய்ம்ஸ் மருத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், நுரையீரல் சிகிச்சையில் முன்னோடியுமான டாக்டர் ஜிதேந்திர நாத் பாண்டே (78) கொரோனா தொற்று காரணமாக நேற்று தனது இல்லத்தில் மரணமடைந்தார். 2003 ஆம் ஆண்டில் எயம்ம்ஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர், டெல்லி சீதாராம் பாரதியா மருத்துவமனையில் நுரையீரல் துறை இயக்குனராகவும், பேராசிரியருமாகவும் பதவி வகித்து வந்தார்.
“வீட்டுப் பராமரிப்பில் இருந்து வந்த டாக்டர் பாண்டே, குணமடைந்து வருவதாகத் தோன்றியது. மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நேசிக்கும் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல், ”என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சுவாச நோய் சிகிச்சை தொடர்பாக நூற்றுக்கணக்கான மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை டாக்டர் பாண்டே எழுதியவர். தற்போதைய, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் தனிப்பட்ட மருத்துவராக இருந்த அவர், பல மதிப்புமிக்க விருதுகளையும் பெற்றவர்.
எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, டாக்டர் பாண்டேவின் மரணம் தனிப்பட்ட இழப்பு என்று விவரித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “எய்ம்ஸ் நிறுவனத்தில் இளங்கலை பட்டதாரியாக சேர்ந்த அவர், ஓய்வு பெறும் வரை முழு மூச்சாக பணி புரிந்தார். 1992-ல் பணியில் சேர்ந்த நான், டாக்டர் பாண்டே ஓய்வு பெறும் வரை அவரின் மேற்பார்வையில் பணியாற்றினேன். என் தந்தையிடம் பயின்றவர்களில் இவரும் ஒருவர். இதனால், இவருடனான தொடர்பு எனது குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்குகிறது. என்னைப் பொறுத்தவரை, இது எனது பெரிய தனிப்பட்ட இழப்பு ”என்று ரன்தீப் குலேரியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil