பா.ஜ.க ஆளும் ஹூப்ளி-தர்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் (எச்.டி.எம்.சி) ஹூப்ளியில் உள்ள இத்கா மைதானத்தில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாட நேற்று (புதன்கிழமை ) அனுமதி அளித்துள்ளது. இத்கா மைதானத்தில் திப்பு ஜெயந்தி நிகழ்ச்சி நடத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) மற்றும் சமதா சைனிக் தளம் நகராட்சியிடம் அனுமதி கோரிய நிலையில், நேற்று நகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், மைதானத்தில் வீரராணி ஒனகே ஓபவ்வா ஜெயந்தி மற்றும் பக்த கனகதாச ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கும் மாநகராட்சி அனுமதி வழங்கியது. இத்கா மைதானம் பல விவகாரங்களால் சர்ச்சைக்குரிய மைதானமாக இருந்து வருகிறது. கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு படி, இத்கா மைதானத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை இஸ்லாமியர்கள் மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்கியது சர்ச்சையானது.
தற்போது, திப்பு ஜெயந்தி நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் நகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும். காலை 10 மணி முதல் 12 மணிக்குள் நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும். திப்பு சுல்தானின் புகைப்படங்களை காட்சிப்படுத்தலாம். ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பேனர், படங்கள் வைக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மைதானத்தில் திப்பு ஜெயந்தி கொண்டாடுவது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அனுமதி கேட்டு விண்ணப்பித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் தார்வாட் மாவட்ட இணைச் செயலாளர் விஜய். எம். குண்ட்ரால் நகராட்சி அனுமதி வழங்கப்பட்டதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால் அதேவேளையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்
மாவட்ட தலைவரும், நகராட்சி உறுப்பினருமான நசீர் ஹொன்யால் புனித இடத்தில் (இத்கா) நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார்.
எதிர்ப்புகளையும் மீறி திப்பு ஜெயந்தி கொண்டாடப்படும் என விஜய் கூறினார். மறுபுறம், வலதுசாரி இந்து ஆர்வலர்கள், ஸ்ரீராம சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் உள்ளிட்டவர்கள் நகராட்சி முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 17-ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னர் திப்பு சுல்தானை வலதுசாரி இந்து ஆர்வலர்கள்
இந்து விரோதியாக கருதுகின்றனர்.
கர்நாடகாவில் முந்தைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 2016-ம் ஆண்டு திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களைத் தொடங்கியது. இது பா.ஜ.கவின் பரவலான எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. 2019-ம் ஆண்டு எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்தது.
இத்கா மைதானத்தின் உரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடந்த நிலையில், மைதான சொத்து மாநகராட்சிக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil