Advertisment

மகாராஷ்டிராவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை கோரும் ஓவைசி கட்சி; சிக்கலில் சிவசேனா கூட்டணி

AIMIM Muslim quota demand stirs troubled waters for MVA: மகாராஷ்டிரா அரசியலில் ஆழமாக தடம் பதிக்க விரும்பும் ஓவைசியின் கட்சி, முஸ்லிம் இடஒதுக்கீட்டு கோரிக்கையை எழுப்பி, சிவசேனா கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது

author-image
WebDesk
New Update
மகாராஷ்டிராவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை கோரும் ஓவைசி கட்சி; சிக்கலில் சிவசேனா கூட்டணி

மராத்தா மற்றும் ஓபிசி ஆகிய இரு பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிரா அரசு போராடி வரும் நேரத்தில், மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை AIMIM வைத்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ்-என்சிபி அரசாங்கம் முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது, ஆனால் இடஒதுக்கீடு இன்னும் வழங்கப்படவில்லை.

Advertisment

டிசம்பர் 11 அன்று மும்பையில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, சிவசேனா, NCP மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட மகாராஷ்டிர அரசு ஏன் முஸ்லிம் ஒதுக்கீட்டை அமல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த இடஒதுக்கீடு முன்பு உயர் நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

2012 இல் முதன்முதலில் மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த AIMIM இன் இந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கை, மாநிலத்தில் அதன் தடத்தை வலுப்படுத்துவதற்கான கட்சியின் முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. ஹைதராபாத்திற்கு வெளியே AIMIM தேர்தல் வெற்றியைப் பெற்ற முதல் இடம் மகாராஷ்டிரா. ஒவைசியின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை, இந்த பிரச்சனை தொடர்பாக MVA அரசாங்கம் போதுமான அளவில் கவனம் செலுத்தாததாக கருதும், முஸ்லிம்கள் மத்தியில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

மகாராஷ்டிராவில் முஸ்லிம்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மெஹ்மூத்-உர்-ரஹ்மானின் கீழ் 2008 இல் ஒரு குழுவை அமைத்த காங்கிரஸ்-என்சிபி அரசாங்கத்தால் இந்த இடஒதுக்கீட்டு யோசனை முதலில் வெளியிடப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 11.54% முஸ்லிம் சமூகத்தினர் உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்த குழுவின் அறிக்கை சமூகத்தின் மோசமான நிலையை வெளிப்படுத்தியது. மாநிலத்தில் கிட்டத்தட்ட 60% முஸ்லீம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர், அரசாங்க பணிகளில் உள்ளவர்களில் அவர்களின் பங்கு 4.4% மட்டுமே, அவர்களில் 2.2% பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் என்று குழு தெரிவித்துள்ளது. மேலும், குழுவால் கல்வி மற்றும் வீட்டு வசதிகளில் பொது மற்றும் தனியார்த்துறை ஆகிய இரண்டிலும் 8% இடஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது.

ஜூலை 2014 இல், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ்-என்சிபி அரசாங்கம் மராத்தியர்களுக்கு 16% இடஒதுக்கீடு மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகள் அல்லது கல்லூரிகள் மற்றும் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை இயற்றியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விரைவில் பாஜக ஆட்சிக்கு வந்தது. நவம்பர் 14, 2014 அன்று மும்பை உயர்நீதிமன்றம் மராத்தா இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது ஆனால் கல்வியில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை அனுமதித்தது. முஸ்லீம்களின் விஷயத்தில் அவசரச் சட்டத்தை நிறுத்தி வைப்பது அவர்களை பிரதான 'மதச்சார்பற்ற' கல்விக்கு இழுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று உயர் நீதிமன்றம் கூறியது.

பாஜக அரசாங்கம் மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்வதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்து, சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிய ஒரு குழுவை நியமித்தாலும், முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் அத்தகைய நடவடிக்கை இல்லை. மார்ச் 2015 இல், முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பான அவசரச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் அனுமதித்தது.

MVA ஆட்சிக்கு வந்த பிறகு, பிப்ரவரி 2020 இல், சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் நவாப் மாலிக், முஸ்லிம்களுக்கு கல்வி நிறுவனங்களில் 5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று சட்ட சபையில் அறிவித்தார். ஒரு வாரம் கழித்து, முதல்வர் உத்தவ் தாக்கரே, "இந்துத்துவாவை சிவசேனா மறந்துவிட்டது" எனும் பாஜகவின் தாக்குதல்களை மனதில் வைத்து, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.

முஸ்லீம் இடஒதுக்கீடு MVA இன் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். NCP மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் சங்கடமான கேள்விகளை சந்திக்க நேரிடும், ஏனெனில் மராத்தியர்கள் மற்றும் OBCகளுக்கான ஒதுக்கீடுகள் இதில் சிக்கியுள்ளன.

அவரது பேரணிக்குப் பிறகு ஓவைசியைத் தாக்கிய நவாப் மாலிக் “சில அரசியல் கட்சிகள் முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையை எழுப்புகின்றன. முந்தைய பாஜக அரசு இடஒதுக்கீடுகளை ரத்து செய்தபோது, ​​இந்தக் கட்சிகள் பாஜகவைக் கேள்வி கேட்கவில்லை” என்று கூறினார். முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வதில் MVA அரசாங்கம் உறுதியாக இருப்பதாக மாலிக் கூறியபோது, ​​அது சாத்தியமில்லை என்று ஆதாரங்கள் ஒப்புக்கொண்டன.

முன்னாள் சிறுபான்மை மேம்பாட்டு அமைச்சரும், 2014ல் முஸ்லீம் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாவை முன்மொழிந்தவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அரிப் நசீம் கான், AIMIM விடம் கேள்வி எழுப்பினார். "முஸ்லீம் இடஒதுக்கீடுக்காக தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசாங்கத்துடன் காங்கிரஸ் போராடிய ஐந்து ஆண்டுகளில், AIMIM ஒரு வார்த்தை கூட பேசவில்லை," என்று நசீம் கான் கூறினார். மேலும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் MVA உறுதியாக இருந்தது என்றும் நசீம் கான் கூறினார்.

சட்டத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எந்த ஏற்பாடும் இல்லாததால், அத்தகைய ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று பாஜக கூறியுள்ளது. “கூடுதல் இடஒதுக்கீடு (முஸ்லிம்களுக்கு) வழங்கப்பட்டால், ஓபிசிக்கள் தங்கள் ஒதுக்கீட்டை இழக்க நேரிடும். மராத்தா இடஒதுக்கீடும் பாதிக்கப்படும் என்று ஃபட்னாவிஸ் முன்பு கூறியிருந்தார்.

ஐதராபாத்தை தளமாகக் கொண்ட AIMIM முதன்முதலில் மகாராஷ்டிராவில் தனது அரசியல் பயணத்தை 2012 இல் தொடங்கியது, அது நான்டெட் முனிசிபல் கார்ப்பரேஷனில் 11 இடங்களை வென்றது. 2014ல், அவுரங்காபாத் மற்றும் பைகுல்லா சட்டசபை தொகுதிகளை வென்றது. 2019 ஆம் ஆண்டில், அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியில் சிவசேனாவின் இரண்டு தசாப்த கால பிடியை உடைத்ததன் மூலம் அது ஒரு வகையான வரலாற்றை உருவாக்கியது. சட்டமன்றத் தேர்தலில் அவுரங்காபாத் மற்றும் பைகுல்லா தொகுதிகளை AIMIM தக்கவைக்கவில்லை என்றாலும், துலே மற்றும் மாலேகான் ஆகிய இரு இடங்களை அது கைப்பற்றியது.

இப்போது கட்சிக்கு மாநிலத்தில் உள்ள மாநகரங்கள் மற்றும் நகரங்களில் 120க்கும் மேற்பட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளனர்.

மும்பை, தானே, புனே மற்றும் நாசிக் போன்ற முக்கிய நகரங்கள் உட்பட மகாராஷ்டிராவில் 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவிருக்கும் தேர்தல்களில் AIMIM உடனடி கவனம் செலுத்துகிறது. மகாராஷ்டிராவில் முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் தேர்தல் நடைபெறும் நகர்ப்புற மையங்களில் குடியேறியுள்ளனர்.

மும்பையில், முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 20% க்கும் அதிகமாக உள்ளனர், ஆனால் அதன் 227 மாநகராட்சி உறுப்பினர்கள் 29 பேர் மட்டுமே முஸ்லிம்களாக உள்ளனர். 227 BMC இடங்களில் சுமார் 50 இடங்களில் முஸ்லிம் சமூகம் முக்கிய தேர்தல் பங்கை வகிப்பதாக நம்பப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Maharashtra Congress Shiv Sena Asaduddin Owaisi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment