வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி மற்றும் காங்கிரஸ் எம்.பி முஹம்மது ஜாவேத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Waqf Bill challenged in SC as AIMIM President Asaduddin Owaisi moves court
ஒவைசி மற்றும் ஜாவேத் இருவரும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற தொடர் விவாதங்களுக்கு பின்னர் ஒப்புதல் பெறப்பட்டதை தொடர்ந்து, வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
வழக்கறிஞர் அனஸ் தன்வீர் மூலம் காங்கிரஸ் எம்.பி ஜாவேத் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த மசோதா வக்ஃப் சொத்துக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகத்தின் மீது "தன்னிச்சையான கட்டுப்பாடுகளை" விதிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மசோதா "பிற மத உதவிகளின் நிர்வாகத்தில் இல்லாத கட்டுப்பாடுகளை விதிக்கிறது" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஒவைசியின் மனுவை வழக்கறிஞர் லாசபீர் அகமது தாக்கல் செய்தார்.
மசோதா நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, "மிக விரைவில்" உச்ச நீதிமன்றத்தில் மசோதாவை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக காங்கிரஸ் கூறியது. "இந்திய அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்" என்று அக்கட்சியின் தகவல் தொடர்புச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
முன்னதாக, வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா என்பது "அரசியலமைப்புச் சட்டத்தின் மீது வெட்கக்கேடான தாக்குதல்" என சோனியா காந்தி தெரிவித்திருந்தார்.
288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் வியாழக்கிழமை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.