Air India: டாடா குழுமம் தலைமையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தவறான நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் கேபின் குழு ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கேபின் குழு ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு உள்ளாகி இருக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Air India Express cancels flights due to cabin crew shortage: Report
குறைந்த கட்டண கேரியர் விமானங்களாக ஏ.ஐ.எக்ஸ் (AIX) கனெக்ட் விமானங்கள் (முன்பு ஏர் ஏசியா இந்தியா) உடன் இணைக்கும் செயல்முறை தொடங்கிய பிறகு, கேபின் குழு ஊழியர்கள் மத்தியில் சில காலமாக அதிருப்தி நிலவியது. இந்த நிலையில், நேற்று திங்கள்கிழமை மாலை முதல் கேபின் குழு ஊழியர்கள் பலர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், போதுமான கேபின் குழு ஊழியர்கள் இல்லாததால், கொச்சி, காலிகட் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் "பல விமானங்கள்" ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாத இறுதியில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் ஊழியர்கள் சிலர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், விமான நிறுவனம் தவறாக நிர்வகிக்கப்படுவதாகவும், ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லை என்றும் குற்றம் சாட்டியது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர் சங்கம் (AIXEU), சுமார் 300 கேபின் குழு ஊழியர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஒரு பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம், பெரும்பாலும் மூத்தவர்கள், தவறான நிர்வாகத்தால் ஊழியர்களின் மன உறுதியை பாதித்துள்ளது என்று குற்றம் சாட்டியது.
முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், பெங்களூரு- டெல்லி, கோழிக்கோடு- துபாய் குவைத்- தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா கண்ணூரில் இருந்து தனது விமானங்களை ரத்து செய்தது. அதன்படி, கண்ணூரில் இருந்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, கொச்சி விமான நிலையத்திலிருந்து நான்கு சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஊடக அறிக்கைகளின்படி, திருவனந்தபுரம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் இருந்து சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கச் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தாலும், அதன் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தான் ரத்து செய்ய வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா குழுமத்தின் முழு-சேவை கேரியர் விஸ்டாரா நிறுவனம் பின்னடைவை கண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினசரி 10 சதவிகிதம் அல்லது 25-30 விமானங்களை தற்காலிகமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக விஸ்டாரா நிறுவனம் அண்மையில் அறிவித்தது. அதன் விமான வணிகத்தை ஒருங்கிணைப்பதன் ஒரு பகுதியாக, டாடா குழுமம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் மற்றும் விஸ்டாராவை ஏர் இந்தியாவுடன் இணைத்தது குறிப்பிடத்தக்கது.