Air India takeover: இன்று இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தில், ஏர் இந்திய பைல்ட்கள் தங்களின் வாய் திறந்து கூறும் முதல் வரவேற்பானது இப்படி தான் இருக்கும் “வணக்கம் பயணிகளே, நான் உங்கள் கேப்டன் பேசுகிறேன். வரலாற்றில் மிக முக்கியமான ஒரு விமான பயணத்திற்கு உங்களை நான் வரவேற்கின்றேன். 70 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று, ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஏர் இந்தியா விமானத்திலும் புத்துணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துடன் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம். ஏர் இந்தியாவின் எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம். நீங்கள் இந்த பயணத்தை சிறப்பாக அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம். நன்றி” என்பதாக தான் இருக்க முடியும்.
டாட்டா குழுமம் வியாழன் அன்று அரசாங்கத்திடம் இருந்து விமான நிறுவனத்தை எடுத்துக் கொண்ட பிறகு ஏர் இந்தியாவின் செயல்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்ட முதல் சுற்றறிக்கை இதுவாகும். சிறிய மாற்றங்கள் இருந்தபோதிலும், ஏர் இந்தியாவை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து டாட்டா குழுமத்தின் முதல் முன்னுரிமைகளில் ஒன்று விமான நிறுவனத்திற்கு ஒரு மூத்த நிர்வாக உறுப்பினர்களை உருவாக்குவதாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ஏர் இந்தியாவின் நான்கு இயக்குநர்கள் குழுவில் இருக்கின்ற நிலையில், நிர்வாக மற்றும் இதர இயக்குநர்களை முடிவு செய்யும் இறுதி கட்ட பணியில் டாட்டா குழுமம் இறங்கியுள்ளது.
நிர்வாக இயக்குநர்கள் பெயர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு அனுமதிக்கு நேரம் தேவைப்படுகிறது என்று டாட்டா குழுமத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறினார். ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு குறிப்பிடத்தக்க விமான அனுபவமுள்ள பல வெளிநாட்டவர்களை டாட்டா குழுமம் நேர்காணல் செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட உயர்மட்ட FMCG தலைவர் ஒருவர் ஏர் இந்தியாவின் நான்-எக்ஸ்க்யூட்டிவ் இயக்குநராக டாட்டா குழுமத்தால் பரிந்துரை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏர்லைன்ஸின் மீதமுள்ள ஊழியர்களுக்கு, ஏல நிபந்தனைகளின்படி, டாட்டா குழுமம் ஒரு வருட காலத்திற்கு அவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் தன்னார்வ ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அந்த ஊழியர்களால் வழங்க இயலும்.
நிர்வாக இயக்குநர்கள் முடிவு செய்யப்பட்டவுடன், அடுத்த 10 நாட்களில் விமான நிறுவனத்திற்கான திட்டங்கள் மற்றும் உத்திகளை டாட்டா நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான போக்குவரத்து இப்போது துவங்கும். ஆனாலும் ஊழியர்களும் பயணிகளும் உணரக்கூடிய மாற்றத்தை அவர்கள் காண சில மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
முறைப்படி நிறுவனத்தை டாட்டாவிடம் வழங்குவதற்கு முன்பே , டாட்டா குழுமத்தின் பணி கலாச்சாரத்தைப் பற்றி பல துறைகளைச் சேர்ந்த முக்கிய ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக குழுமத்தின் நிர்வாகிகள் புதுதில்லியில் உள்ள விமான நிறுவனத்தின் தலைமையகத்திற்கு வர துவங்கினார்கள். இந்த அறிமுகப் பயிற்சி கிட்டத்தட்ட கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது, மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரிகளில் ஒருவர், இந்த செயல்முறை பொதுத்துறை ஊழியர்களிடம் தனியார் துறை நெறிமுறைகளை விதைப்பதில் கவனம் செலுத்துவதாக கூறினார்.
ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா
நிறுவனங்களை ஒரு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா இடையேயான இணைப்பு அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார். நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை லாபகரமாக மாற்ற டாட்டா நிறுவனம் முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஏர் இந்தியா நிறுவனத்தின் தனியார்மயமாக்கும் நிகழ்வு, தினசரி அந்த நிறுவனத்தால் ஏற்படும் ரூ. 20 கோடி இழப்பீட்டை ஈடுகட்ட வரி செலுத்துவோரின் பணம் கொடுக்க வேண்டிய தேவைக்கான முற்றுப்புள்ளியாகும். 2009-10 முதல், ஏர் இந்தியாவை ஆதரிப்பதற்காக அரசாங்கம் ரூ.1.10 லட்சம் கோடியை செலவு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil