ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை. காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நிதி அமைச்சராக பணியாற்றியவர் தமிழகத்தை சேர்ந்த ப. சிதம்பரம்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரம்
2006 - 2012 காலத்தில் அவர் நிதித்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்திற்கு ரூ.3500 கோடியை முதலீடு செய்வதற்கு உதவியதாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
To read this in English
இந்தியாவிற்குள் 600 கோடி ரூபாய் வரையிலான அன்னிய முதலீட்டினை மட்டுமே நிதித்துறை அமைச்சகம் அனுமதிக்க முடியும். அதற்கு மேலான முதலீடு என்றால் பொருளாதார விவகாரத்திற்கான மத்திய அமைச்சரவை குழுதான் அனுமதி அளிக்கும். ஆனால் இச்சட்டத்தினை மீறு அனுமதி தந்ததாக ப.சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு மற்றும் விசாரணை
மேலும் இந்த நிதியை மறைமுகமாக பெறுவதற்கு கார்திக் சிதம்பரம் அவருடைய நிறுவனத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளிப்பட்டதை தொடர்ந்து அவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் அமலாக்கத்துறையினர்.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதி மன்றம் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேலும் சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி ஆகிய இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடை காலத்தினை அக்டோபர் 8 வரை நீட்டித்துள்ளது.
ஆனால் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லாத பட்சத்தில் அமலாக்கத்துறையினரால் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் முன்னாள் நிதி அமைச்சர். இதற்கு முன்பு ஜூன் 5ம் தேதி சிபிஐ சிதம்பரத்திடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.