நாட்டில் கடந்த சில நாள்களாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, விமானப் பயணத்திற்கான தேவையை குறைத்துள்ளது. பல முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்நாட்டு அட்டவணைகளை மாற்றியமைக்கும் பணியிலும், விமானங்களை ரத்து செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தேவை குறைவதால் திட்டமிடப்பட்ட விமானங்களில் 20 சதவீதத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. விஸ்டாராவும், மாறிவரும் தேவைக்கு ஏற்ப பயண திட்டங்களை மாற்றியமைப்பதாக தெரிவித்தது.
மேலும், ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில், “தினமும் ஒரே வழிதடத்தில் பல விமானங்கள் இயக்கும் பட்சத்தில், மக்களின் எண்ணிக்கையை பொறுத்து அவற்றை இணைத்து இயக்கிட திட்டமிட்டுள்ளதாக” தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 31 ஆம் தேதி வரையிலான புதிய மற்றும் பழைய புக்கிங்களை இலவசமாக மார்ச் 31 வரையிலான விமானங்களுக்கு மாற்றிக்கொள்ளலாம் என இண்டிகோ அறிவித்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. அதன் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது.
டிசம்பர் 26 ஆம் தேதியன்று 3.85 பேர் விமான பயணங்களை மேற்கொண்ட நிலையில், ஜனவரி 8 ஆம் தேதி விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை 2.41 லட்சமாக குறைந்துள்ளது.
விமானத்தில் இருக்கைகள் நிரம்புவதை கணக்கிட்டால், ஜனவரி 8 அன்று இண்டிகோவில் 65.8 சதவீதம் நிரம்பியுள்ளது. சராசரியாக,ஒவ்வொரு 100 இருக்கைகளிலும் 34க்கும் அதிகமானவை விற்பனையாகவில்லை.
அதன் போட்டி நிறுவனங்களான, ஸ்பைஸ்ஜேட் 68.5 சதவீதமாகவும், கோ ப்ர்ஸ்ட் 62.8 சதவீதமாகவும், ஏர் இந்தியா 67.4 சதவீதமாகவும், விஸ்தாரா 53.6 சதவீதமாகவும், ஏர் ஏசியா 59.6 சதவீதமாகவும் மக்கள் பயணிக்கும் எண்ணிக்கை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், ” ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான இண்டிகோ வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி வருகின்றனர். வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப, இண்டிகோ பயண தேதி மாற்றிடுவதற்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறது.
31 மார்ச் 2022 வரையிலான விமானங்களுக்கு, ஜனவரி 31 வரை செய்யப்பட்ட அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே உள்ள முன்பதிவுகளும் இலவசமாக மாற்றிகொள்ளும் வசதியை வழங்குகிறது. மேலும், மக்கள் பயணிக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, சில திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்துள்ளோம். சுமார் 20 விழுக்காடு விமானங்கள் சேவையிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளது.
விஸ்தாரா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது, பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், விமான பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை கவனித்துள்ளோம். விஸ்தாரா பொறுத்தவரை, நிலைமையை கண்காணித்து, தேவைக்கேற்ப திட்டங்களை சரிசெய்து வருகிறோம். பயண தேதி மாற்றுதல், பணம் திரும்ப வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகளை வாடிக்கையாளர்களுக்குப் வழங்குவதன் மூலம் சிரமத்தைக் குறைக்க முயற்சிக்கிறோம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil