DigiYatra and Biometric: போர்டிங் பாஸ் இல்லாமல் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர தற்போது புதிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையங்களில் பயோமெட்ரிக் அடிப்படையிலான போர்டிங் அமைப்பின் சோதனை ஓட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. காகித ஆவணங்களுக்கு பதிலாக அடையாள ஆதாரத்திற்காக முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பயோமெட்ரிக் சேவை நடைமுறைப் படுத்தப்படுகிறது.
”பதிவு செய்ய சுமார் இரண்டு நிமிடங்கள் ஆனது, பின்னர் நான் போர்டிங் பாஸ் இல்லாமல் நேராக வாயிலுக்குச் சென்றேன். பெங்களூரு மற்றும் டெல்லி விமான நிலையங்களும் காகிதமற்ற பயோமெட்ரிக்ஸ் திட்டத்தின் சோதனையைத் தொடங்கின. சமீப காலம் வரை, விமான நிலையத்திற்குள் செல்ல டிக்கெட்டின் காகித நகலை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது, காகித போர்டிங் பாஸை முத்திரையிட்டு பெற்று, நாட்டிலிருந்து வெளியேற ஒரு படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. இப்போது, இது எதுவுமே தேவையில்லை” என்று சமீபத்தில் போர்டிங் பாஸ் இல்லாமல் ஹைதராபாத் விமான நிலையத்துக்கு சென்று வந்த அஜய் என்ற பயணி தெரிவித்திருக்கிறார்.
”பயணிகள் இனி தங்கள் டிக்கெட் அல்லது போர்டிங் பாஸ் மற்றும் உடல் சார்ந்த அடையாள அட்டைகளை விமான நிலையத்தில் உள்ள பல சோதனைச் சாவடிகளில் காட்ட வேண்டிய அவசியமில்லை” என விமான அமைச்சகத்தின் டிஜி யாத்ரா தெரிவிக்கிறது.
டிஜிட்டல் போர்டிங் பாஸ் எவ்வாறு வேலை செய்யும்?
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜியாத்ரா திட்டத்தின் கீழ், விமானப் பயணிகள் தங்களது வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், ஆதார், பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை பயன்படுத்தி டிஜி யாத்ரா ஐடியை உருவாக்க முடியும்.
நாம் விமான நிலையத்திற்குள் நுழையும்போது, டிஜி யாத்ரா ஐடி மற்றும் டிக்கெட்டின் பி.என்.ஆர் ஆகியவற்றைப் பயன்படுத்தி நம் அடையாளம் சரிபார்க்கப்படும். செக்-இன், பேக் டிராப், செக்யூரிட்டி செக் மற்றும் போர்டிங் கேட் ஆகியவற்றின் போது விமான நிலையத்திற்குள் உள்ள மற்ற அனைத்து விஷயங்களுக்கும் முக பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படும்.