சந்தனு சௌதுரி
மேற்கு வங்காளத்தின் துர்காபூர் அனல் மின் நிலைய காலனியில் உள்ள இரண்டு அறைகள் கொண்ட ஒரு பிளாட்டின் ஓவிய அறையில் துர்காதேவி மகிஷாசுரனை வதம் செய்யும் ஒரு ஓவியம் உள்ளது. கீழே ஒரு சோஃபாவில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷின் தாயார் சர்மிஸ்தா கோஷ் அமர்ந்திருக்கிறார்.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...
சர்மிஸ்தா தனது மகளைப் பற்றி கூறுகையில், “அவள் எப்போதும் நுண்கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தாள். பள்ளி மற்றும் கல்லூரியில் தனது ஓவியங்களுக்காக பல விருதுகளை வென்றுள்ளாள். உயர்க்கல்வி மீதான ஆர்வம் இல்லாமல் இருந்தால், அவள் ஒரு ஓவியராக ஆகியிருப்பாள்” என்கிறார்.
ஜே.என்.யு.வில் ஜனவரி 5-ம் தேதி வன்முறை நடந்து சில நாட்களுக்குப் பிறகு, அய்ஷி (24) பற்றி சொல்வதற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. வளாகத்தில் மூன்று மணி நேர வன்முறையில் இருந்து வெளியே வந்த முதல் படம் அவள் முகத்தில் இருந்து ரத்தம் வழிந்த படம். அப்போதிருந்து, அய்ஷி நிர்வாகத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை, வன்முறையில் காயம் அடைந்ததால் கட்டு போடப்பட்ட தலை மற்றும் கைகளுடன் முன்னெடுத்து வருகிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து திரும்பிய சர்மிஸ்தா தனது மகளை பார்க்க முடியவில்லை. அவர் அடுத்த மாதம் செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லி கல்லூரியில் படிக்கும் அய்ஷியின் தங்கை இஷிகா அவர்களைத் தேற்றி வருகிறார்.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) உறுப்பினராக இருந்த சர்மிஸ்தா மற்றும் டிடிபிஎஸ் ஊழியர் டெபாஷிஸ் கோஷ் ஆகியோருக்கு பர்த்வானில் மகளாக பிறந்த அய்ஷி துர்காபூரில் வளர்ந்து பட்டப்படிப்புக்காக டெல்லிக்கு சென்றார்.
“அய்ஷி கோஷ் பத்தாம் வகுப்பில் 90% மதிப்பெண்களும் பன்னிரெண்டாம் வகுப்பில் 93% மதிப்பெண்களும் பெற்றார். அவர் தௌலத் ராம் கல்லூரியில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மேலும், ஜே.என்.யு.-வில் இருந்து சர்வதேச உறவுகள் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார் ” என்று சர்மிஸ்தா பெருமையுடன் கூறுகிறார். அய்ஷி இப்போது ஜே.என்.யு.-வில் ஒருங்கிணைந்த எம்.பில்-பி.எச்.டி. செய்துவருகிறார்.
வன்முறையைத் தொடர்ந்து அய்ஷி மீதான பாஜக தலைவர்களின் தாக்குதல்களால் வேதனையடைந்ததாக (மாநிலக் கட்சித் தலைவர் திலீப் கோஷ், கோஷின் முகத்தில் ரத்தமா அல்லது வண்ணச் சாயமா என்று ஆச்சரியப்பட்டார்) சர்மிஸ்தா கூறுகிறார். “அவரது சான்றுகளை சந்தேகிப்பவர்களுக்கு எதிராக ஆதாரமாக எனது மதிப்பெண்களை வைத்திருக்கிறேன்.” என்று சர்மிஸ்த கூறுகிறார்.
அய்ஷியின் அம்மா கூறுகையில், அய்ஷி கோஷ் தௌலத் ராமில் இருந்தபோது மாணவர் போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார். மேலும் ஜே.என்.யுவுக்குச் சென்றபின் எஸ்.எஃப்.ஐ (சிபிஎம் மாணவர் பிரிவில்) சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தொழிற்சங்கத்தில் கவுன்சிலராக ஆனார், கடந்த ஆண்டு, ஜே.என்.யு.எஸ்.யூ தலைவராக வென்றார்.
இடதுசாரி தொடர்புகள் இருந்தபோதிலும், அய்ஷி ஒரு கூச்ச சுபாவமுள்ள பெண்ணாக வளர்ந்து வருவதால் அவர்கள் வியப்படைந்ததாக சர்மிஸ்தா கூறுகிறார்: “டி.டி.பி.எஸ்ஸில் இடது முன்னணியின் தொழிலாளர் இயக்கத்தில் பங்கேற்ற அவரது தந்தையால் அவள் ஈர்க்கப்பட்டிருக்கலாம்... ஒருவேளை மாணவர் அரசியலில் செயல்படுவதற்கு அவளுக்கு இடம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஜே.என்.யு அவளுக்கு உன்னதமான காரணங்களுக்காக போராட ஒரு தளத்தை வழங்கியது.” என்று கூறினார்.
ஜனவரி 5-ம் தேதி சம்பவத்தைத் தொடர்ந்து எஸ்.எஃப்.ஐ உள்ளூர் குழு உறுப்பினர்கள் கோஷ் வீட்டிற்குச் சென்று, அய்ஷியின் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு பெற்றோரை வாழ்த்தினர்.
கட்டண உயர்வுக்கு எதிரான ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் எதிர்ப்பு பற்றி சர்மிஸ்தா கூறுகையில், “எங்கள் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, நாம் ஒரு கட்டணத்தை உயர்த்தலாம். ஆனால், பொருளாதார ரீதியாக சவாலான பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் உள்ளனர்.” என்று கூறுகிறார்.
ஜனவரி 4-ம் தேதி ஜே.என்.யு சர்வர் அறையை அழித்ததற்காக அவளுக்கு எதிரான போலீஸாரின் வழக்கைப் பற்றி கவலைப்பட்ட சர்மிஸ்தா, “ஜனவரி 5-ம் தேதி சம்பவம் குறித்து போலீசார் ஏன் விசாரணை நடத்தவில்லை? அவளை ஜே.என்.யு மாணவர் சங்கத்திலிருந்து நீக்குவதற்கு இது திட்டமிடப்பட்ட தாக்குதலாகும். துணை வேந்தர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் (அமித் ஷா) அவள் உண்மையான காரணங்களுக்காக போராடுவதால் அவளை ஜே.என்.யு.-வில் இருக்க விரும்பவில்லை.” என்று கூறினார்.
துர்கா பூஜைக்கு அய்ஷி கடைசியாக வீட்டில் இருந்ததை நினைவு கூர்ந்த சர்மிஸ்தா, பாசிச தாக்குதலுக்கு எதிரான தனது போராட்டத்தில் மக்கள் தனது மகளுக்கு ஆதரவளித்ததில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். அவரது தந்தை தொலைபேசியில் கூறுகையில், “இன்று என் மகள் தாக்கப்பட்டாள், நாளை வேறு யாராவது இருக்கலாம்… இது ஒரு இருண்ட கட்டம்... மக்கள் ஒன்றுபட வேண்டும். என்னவாக இருந்தாலும் அவள் தொடர்ந்து போராடுவாள்.” என்று கூறினார்.
தமிழில்: பாலாஜி எல்லப்பன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.