scorecardresearch

ராஜஸ்தான் காங். பொறுப்பாளர் பதவியில் இருந்து அஜய் மக்கன் விலகல்; கார்கே சந்திக்கும் முதல் சவால்!

காங்கிரஸ் கட்சியில் செப்டம்பர் மாதம் நெருக்கடியைத் தூண்டியதாகக் கூறப்படும் அசோக் கெலாட் விசுவாசிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் கோபமடைந்தார்.

ராஜஸ்தான் காங். பொறுப்பாளர் பதவியில் இருந்து அஜய் மக்கன் விலகல்; கார்கே சந்திக்கும் முதல் சவால்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் என்கிற பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தானில் நுழைய இன்னும் பதினைந்து நாட்களே உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக்கு (சி.எல்.பி) இணையான கூட்டத்தை நடத்தியதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்ட முதல்வர் அசோக் கெலாட்டின் விசுவாசிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) பொறுப்பாளர் மாநில அஜய் மக்கன் ராஜினாமா செய்தார்.

ராஜஸ்தான் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் சாந்தி தரிவால், காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி மற்றும் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (ஆர்.டி.டி.சி) தலைவர் தர்மேந்திர ரத்தோர் ஆகியோருக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு நவம்பர் 8-ம் தேதி அஜய் மக்கன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்நிலைக் குழு கூட்டிய சி.எல்.பி கூட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்த விவகாரத்தில் தீர்வு ஏற்படாத நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளராகத் தொடர்வதற்கு தனக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கேவிடம் அஜய் மக்கன் கூறியதாகத் தெரிகிறது. மேலும், கடுமையான ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதாக அஜய் மக்கன் கருதும் மூன்று மூத்த தலைவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத் ஜாடோ யாத்திரையை ஒருங்கிணைக்கும் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.

“எனக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை. எந்த அதிகாரத்துடன் எம்.எல்.ஏ.க்களுடன் பேசுவேன் அல்லது எந்த அதிகாரத்துடன் பொறுப்பாளராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன். கடுமையான ஒழுக்கமின்மை நிலவியது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. மன்னிப்பு கூட கேட்கவில்லை” என்று அவர் தலைமைக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்காத மல்லிகார்ஜுன கார்கே, அவரைப் பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டார். ஒரு வாரம் காத்திருந்த அஜய் மக்கன் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் பாரத் ஜோடோ யாத்ராவை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட பணிக்குழுவின் கூட்டத்தில் இருந்தும் அஜய் மக்கன் விலகி இருந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் காந்தியின் பாரத் ஜாடோ யாத்திரை இன்னும் சில நாட்களில் இந்தி மையப்பகுதிக்குள் நுழைய தயாராகும் நிலையில், யாத்திரைக்கான ஏற்பாடுகளை குழு ஆய்வு செய்தது. மகாராஷ்டிராவிலிருந்து, இந்த யாத்திரை அடுத்த வாரம் மத்தியப் பிரதேசத்திலும், டிசம்பர் முதல் வாரத்தில் ராஜஸ்தானிலும் நுழையும். மேலும், ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் உள்ள சர்தர்ஷாஹர் சட்டமன்றத் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

பாரத் ஜாடோ யாத்திரை மற்றும் சர்தர்ஷாஹர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைக் கருத்தில் கொண்டு விரைவில் ராஜஸ்தான் காங்கிரசுக்கு புதிய பொறுப்பாளர் பதவியேற்க வேண்டியது அவசியம் என்று அஜய் மக்கன் கார்கேவிடம் கூறியுள்ளார். இதில் சுவாரசியமானது என்னவென்றால், மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளராக செப்டம்பர் 25 அன்று ஜெய்ப்பூரில் நடந்த நாடகத்திற்கு சாட்சியாக இருந்தார். புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தை நடத்துவதற்காக அப்போது மல்லிகார்ஜுன கார்கேவும் அஜய் மக்கனும் ஜெய்ப்பூரில் இருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவை அசோக் கெலாட் அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரையாவது இன்னும் சில காலம் முதலமைச்சராக தொடர வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகி புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கட்சியின் உயர்மட்டக் குழு உறுதியாக இருந்தது.

ஆனால், அசோக் கெலாட் ஆதரவாளர்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை மட்டும் புறக்கணிக்காமல், தாரிவாலின் இல்லத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு இணையான கூட்டத்தை நடத்தி, சபாநாயகர் சி.பி. ஜோஷியிடம் அடையாள ரீதியாக தங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்து, காங்கிரஸ் தலைமையை முகம் சுளிக்க வைத்தனர். அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கருத்து கேட்கப்பட வேண்டும் என்று அசோக் கெலாட் விரும்பினார். பதவி விலக வேண்டும் என்றால் தனக்கு நெருக்கமான ஒரு தலைவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் ஆர்வமாக இருந்தார். முன்னாள் துணை முதல்வரும், டோங்க் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட் முதல்வராக பதவியேற்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

முன்னெப்போதும் இல்லாத அளவிலான கிளர்ச்சி காங்கிரஸ் தலைமைக்கு பெரும் சங்கடமாக இருந்தது. காங்கிரஸ் தலைமை அஜய் மக்கனின் அறிக்கையின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு தரிவால், ஜோஷி மற்றும் ரத்தோர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்து, அதற்கு இணையான கூட்டத்தை நடத்தியதன் மூலம் அவர்கள் கடுமையான ஒழுங்கீனத்தை செய்ததாக அந்த நோட்டீஸ் தெளிவுபடுத்தியது.

தனக்கு விசுவாசமான எம்.எல்.ஏ.க்கள் வரம்பு மீறியதால் புயலால் பாதிக்கப்பட்ட அசோக் கெலாட், நான்கு நாட்களுக்குப் பிறகு, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். மேலும், தான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த அசோக் கெலாட், ஜெய்பூரில் நடந்த நிகழ்வுகளுக்காக கட்சித் தலைமையிடம் மன்னிப்புக் கேட்டதை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியைத் தொடருங்கள் என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறினாலும், அஜய் மக்கன் ராஜினாமா செய்த முடிவு புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்திக்கும் காங்கிரஸ் கட்சியின் முதல் சவாலக உள்ளது. அஜய் மக்கன் தனது ஒரு பக்க கடிதத்தில், “கடந்த மூன்று தலைமுறைகளாக காங்கிரஸ் சித்தாந்தத்துடன் இணைந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர காங்கிரஸ் அரசியலில் இருப்பதால், நான் எப்போதும் ராகுல் காந்தியைத் தீவிரமாகப் பின்பற்றுபவனாக இருப்பேன், அவர் வார்த்தைகளுக்கு அப்பால், நம்பிக்கையும் கீழ்படிதலும் கொண்டவன்” என்று அஜய் மக்கன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ajay maken quits as aiccs rajasthan in charge malligarjun kharge faces first challenge