பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) மற்றும் பிரிக்கப்படாத தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) இடையே "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு" நடந்த முக்கியமான சந்திப்பின் ஒரு பகுதியாக தொழிலதிபர் கெளதம் அதானி இருந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். பா.ஜ.க தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், அவர் (அப்போது பிரிக்கப்படாத என்.சி.பி-யின் ஒரு பகுதி) துணை முதல்வராகவும் பதவியேற்றபோது, அதிகாலை விழாவுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் முன்னேற்றங்களை அஜித் குறிப்பிடுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: Gautam Adani was part of BJP-NCP alliance talks ‘5 years ago’, Ajit Pawar reveals in interview
“உங்களுக்குத் தெரியாதா? இது 5 வருடங்களுக்கு முன்பு நடந்தது. கூட்டம் எங்கு நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்... அனைவரும் அங்கு இருந்தனர். மீண்டும் சொல்கிறேன். அமித்ஷா இருந்தார், கெளதம் அதானி இருந்தார், பிரபுல் பட்டேல் இருந்தார், தேவேந்திர ஃபட்னாவிஸ் இருந்தார், அஜித் பவார் இருந்தார், பவார் சாஹேப் இருந்தார்” என்று அஜித் பவார் செய்தி இணையதளமான தி நியூஸ் மினிட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார். ஒரு கட்சி ஊழியராக தலைவர் (சரத் பவார்) சொன்னதை மட்டுமே பின்பற்றுவதாக அவர் கூறினார்.
ஜூனியர் பவாருடன் சென்ற பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஒரிஜினல் என்.சி.பி கட்சிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, சரத் பவார் அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அஜித்தின் கிளர்ச்சி 80 மணி நேரம் நீடித்தது. சில நாட்களுக்குப் பிறகு, பிரிக்கப்படாத என்.சி.பி மற்றும் சிவசேனா காங்கிரஸுடன் இணைந்து மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசாங்கத்தை அமைத்தன.
சரத் பவார் ஏன் குறுக்கு வழியில் செல்லவில்லை என்று கேட்டதற்கு, அஜித், “ஷரத் பவார் மனதை ஒருபோதும் கணிக்க முடியாத நபர். உலகில் ஒருவராலும் கணிக்க முடியாது. எங்கள் அத்தை அல்லது சுப்ரியா (அவரது மகள்) கூட கணிக்க முடியாது.” என்று கூறினார்.
மூத்த பவார் தலைமையிலான என்.சி - என்.சி.பி கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலேவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அத்தகைய சந்திப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். "நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ள பங்கேற்பாளர்களின் சந்திப்பு பற்றி எனக்கு முற்றிலும் தெரியாது என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன்," என்று அவர் கூறினார்.
ராஜ்யசபா எம்.பி.யும், சிவசேனா (யு.பி.டி) செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா சதுர்வேதி, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார், "அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் டிஜிட்டல் தளத்திற்கு அளித்த பேட்டியின்படி, கவுதம் அதானி முடிவெடுக்கும் கூட்டங்களில் அமர்ந்துள்ளார். மகாராஷ்டிராவில் சாத்தியமில்லாத கூட்டணிகளை சரி செய்து பா.ஜ.க-வை எப்படி ஆட்சிக்கு கொண்டுவருவது. இது சில தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது: அவர் பா.ஜ,க அங்கீகரிக்கப்பட்ட பேரம் பேசுபவரா? கூட்டணியை சரிசெய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? ஒரு தொழிலதிபர் ஏன் மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு இவ்வளவு ஆர்வமாகவும் நெருக்கமாகவும் உழைக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருத்து கேட்க, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தில் கட்சிக்கு எந்த கருத்தும் இல்லை என்று கூறினார்.
அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக அஜித் பவார் கூறியிருந்தாலும், அவர் குறிப்பிட்ட சந்திப்பு உண்மையில் 2017-ல் நடந்தது என்று பா.ஜ.க வட்டாரம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.