கேரள இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வாக்காளர் அடையாள அட்டை நடிகர் அஜித் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் கேரள இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போலி வாக்காளர் அட்டைகள் பயன்படுத்தப்பட்டாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் போலி வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக நான்கு இளைஞர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கர் காங்கிரஸின் ஏ-குழுவிற்காக இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரள காவல்துறை கூறியதாக ஓன்மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது.
மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் மம்கூட்டத்தில் ஏ-குழுவில் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏ-குழு ஒரு காலத்தில் ஏ.கே.ஆண்டனி, உம்மன் சாண்டி போன்ற தலைவர்களின் தலைமையில் இருந்தது.
கைது செய்யப்பட்டவர்கள் அபி விக்ரம், ஃபெனி, பினில் பினு மற்றும் விகாஸ் கிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டனர். ஃபெனி மற்றும் பினில் பினு ஆகியோர் ராகுல் மம்கூட்டத்திலை கவுரவிப்பதற்கான வரவேற்பில் கலந்துக் கொண்டு திரும்பியபோது கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒன்மனோரமாவின் மற்றொரு அறிக்கை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து 24 போலி வாக்காளர் அட்டைகளை போலீசார் கைப்பற்றியதாகவும், அதுபோன்ற ஒரு போலி வாக்காளர் அட்டை திரைப்பட நடிகர் அஜித்தின் பெயரில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடூரைச் சேர்ந்த விகாஸ் கிருஷ்ணா ரூ.1000க்கு ஒரு கார்டு வீதம் போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்துக் கொடுத்துள்ளார். குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முறைகேடுகள் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர்களை விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஜி.பிக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) கடிதம் எழுதியிருந்தார். சுரேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், காங்கிரஸ் மேலிடத் தலைமை, அதாவது ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால் மற்றும் வி.டி. சதீசன் ஆகியோருக்கு இந்த விவகாரம் தெரியும் என்றும் பதிவிட்டு இருந்தார்.
இது ஒரு கடுமையான குற்றம் என்று கூறிய சுரேந்திரன், இந்த வாக்காளர் அட்டைகள் சிம் கார்டுகளை வாங்கவோ அல்லது பொதுத் தேர்தலில் வாக்களிக்கவோ பயன்படுத்தப்படலாம் என்று கூறினார். ஆப் மூலம் வாக்காளர் அட்டை தயாரிக்கும் செயல்முறையின் திரைப் பதிவையும் அவர் இணைத்துள்ளார். DYFI யும் இந்த விவகாரம் தொடர்பாக, புகார் அளித்திருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.