News about Akhilesh Yadav, Congress in tamil:நாட்டில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் (80) உள்ளது. இங்குள்ள 'அமேதி' தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி) பாரதிய ஜனதா கட்சியின் ஸ்மிருதி இரானி இருக்கிறார். முன்பு காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இந்தத் தொகுதி இருந்தது. கடந்த 2004 முதல் 2019 வரை இத்தொகுதியின் எம்.பி-யாக ராகுல் காந்தி இருந்தார். 1984 முதல் 1991 வரை அவரது அப்பா ராஜீவ் காந்தியும், 1980-ல் அவரது சித்தப்பா சஞ்சய் காந்தியும் எம்.பி-யாக இருந்தனர்.
2019 பொதுத்தேர்தலில் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை தோற்கடித்தார். அவருக்கு மோடி இதலைமையிலான அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில், அங்கு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
இந்நிலையில், 2024 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு 'அமேதி' தொகுதியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி (SP - எஸ்.பி) அங்கு களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அமேதி தொகுதிக்கு விசிட் அடித்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமேதியில் ஏழைப் பெண்களின் அவல நிலையைக் கண்டு நான் வருத்தமடைந்தேன். வி.ஐ.பி.க்கள் இந்த தொகுதியில் வெற்றியும் தோல்வியும் அடைந்து வருகிறார்கள். இன்னும் இங்கு நிலைமை அப்படியே உள்ளது என்றால், மற்ற மாநிலங்களைப் பற்றி என்ன சொல்வது? அடுத்த முறை அமேதியில் பெரிய ஆட்களை தேர்வு செய்யாமல், பெரிய உள்ளம் கொண்டவர்களை தேர்வு செய்வார்கள். அமேதியில் வறுமையை ஒழிப்போம் என சமாஜ்வாதி கட்சியினர் உறுதிமொழி எடுக்கிறோம்" என்று இந்தியில் ட்வீட் செய்தார்.
அகிலேஷ் யாதவின் இந்த பதிவு அவரது கட்சி 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸிலிருந்து விலகி இருப்பதற்கான புதிய அறிகுறியாக தெரிகிறது. மேலும், சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு எதிராக அமேதி தொகுதியில் வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்ற குறிப்பையும் கைவிட்டுள்ளது.
இந்த திடீர் முன்னெடுப்பு குறித்து சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி பேசுகையில், “காங்கிரஸ் கடந்த முறை அமேதியை இழந்தது. எனவே அது காங்கிரஸின் தொகுதியாக இல்லை. அங்கு பாஜக வெற்றி பெற்றது, இப்போது அது பாஜக-வின் இடமாக உள்ளது. 2024 தேர்தலில் சமாஜ்வாடி பாஜகவை தோற்கடிக்கும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, 2024 தேர்தலில்"காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி)" போன்ற எந்த பெரிய கட்சியுடனும் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும், அதன் தற்போதைய கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளத்துடன் கூட்டணி தொடரும் என்றும் சமாஜ்வாடி கட்சி கூறியது.
அமேதியில் உள்ள சமாஜவாதி கட்சித் தலைவர் ஒருவர் பேசுகையில், அகிலேஷ் யாதவ் தனது மாவட்டத்தில் மேற்கொண்ட பயணத்தின் போது, மக்களவைத் தொகுதியின் அரசியல் சூழல் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். "அவர் சமூக மற்றும் சாதி சமன்பாடுகளைப் பற்றி கேட்டார். இது ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் படியாக இருக்கலாம்." என்று கூறியுள்ளார்.
சமாஜவாதி கட்சி கடைசியாக 1999 ஆம் ஆண்டு அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டது, அப்போது சோனியா காந்தி தனது முதல் தேர்தலில் போட்டியிட்டார். சோனியாவுக்கு 67 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான கமருஜ்ஜாமா ஃபௌசி 2.67 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார்.
கள சோதனை
2004 லோக்சபாவில், ராகுல் காந்தியின் முதல் தேர்தலில், சமாஜ்வாதி அவருக்கு வாக்குகளை சேகரித்து. அவரும் வெற்றி பெற்றார். ஆனால், 2004 ஆம் ஆண்டு அக்கட்சி சோனியாவுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தியது. அந்த ஆண்டு மற்றொரு குடும்ப கோட்டையான ரேபரேலிக்கு சென்றார். அங்கு அவர் வெற்றி பெற்றபோது, சமாஜ்வாதி வேட்பாளர் அசோக் குமார் சிங் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
2009 மற்றும் 2014 தேர்தல்களில் அமேதி அல்லது ரேபரேலியில் சமாஜ்வாதி அதன் வேட்பாளரை நிறுத்தவில்லை. ராகுல் மற்றும் சோனியா முறையே இரண்டு முறையும் அங்கிருந்து வெற்றி பெற்றனர்.
2019 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக்தளத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டபோது, அமேதி அல்லது ரேபரேலியில் கூட்டணி வேட்பாளரை நிறுத்தவில்லை. சோனியா தனது தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், ராகுல் அமேதியில் இருந்து இரானியிடம் தோற்றார்.
சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் சவுத்ரி கூறுகையில், 'ரேபரேலி தொடர்பான கட்சியின் திட்டங்கள் குறித்து நாங்கள் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை' என்றார்.
லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி நிறுவனர் தலைவர் முலாயம் சிங் யாதவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாததன் மூலம், அதன் இரண்டு உயர்மட்ட தலைவர்களுக்கு வாய்ப்புகளை காங்கிரஸ் வழங்கி இருந்தது.
2014ல், முலாயம் (கடந்த ஆண்டு காலமானார்) மைன்புரி மற்றும் அசம்கர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டபோது, காங்கிரஸ் அவரை எதிர்த்து மெயின்புரியில் வேட்பாளரை நிறுத்தாமல் அசம்கரில் போட்டியிட்டது. கன்னோஜில் அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டபோது அங்கும் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தவில்லை.
2019ல், மைன்புரியில் முலாயமை எதிர்த்தும், அசம்கரில் அகிலேஷ், கன்னோஜில் டிம்பிள், ஃபிரோசாபாத்தில் அகிலேஷின் உறவினர் அக்ஷய் யாதவ் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. முலாயம் மற்றும் அகிலேஷ் வெற்றி பெற்ற நிலையில், டிம்பிள் மற்றும் அக்ஷய் தோல்வியடைந்தனர்.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுகையில், அமேதி மற்றும் ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத்தாத போதெல்லாம், காங்கிரஸும் யாதவ் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று கூறினார்.
2024 ஆம் ஆண்டு அமேதியில் சமாஜவாதி கட்சி போட்டியிடக்கூடும் என்று அகிலேஷ் கூறியதற்கு, “இது தேர்தலுக்கு முந்தைய ஒரு சோதனை பயிற்சியாக தோன்றுகிறது. தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது." என்று அந்தத் தலைவர் கூறினார்.
2024 தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியை முன்னிறுத்த காங்கிரஸ் எதிர்பார்த்துள்ளது. ஆனால் யார் தலைமை தாங்குவது என்பது முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளது. மற்ற எதிர்க் கட்சிகளைப் போலவே, சமாஜவாதி கட்சியும் களத்தைச் சோதித்து வருகிறது, மிக சமீபத்தில், மத்திய ஏஜென்ஜிளின் "தவறான பயன்பாடு" குறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்ட குழுவிலும் இருந்தது. ஆனால், அந்தக் கடித்ததில் காங்கிரஸ் கையெழுத்திடவில்லை. முன்னதாக, திமுக நடத்திய பேரணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பேரணியில் சமாஜவாதியும் பங்கேற்றது.
2017 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் நுழைந்தன. அகிலேஷ் மற்றும் ராகுலுடன் "உ.பி-யின் பையன்கள்" "UP ke ladke (UP's boys)" என்ற முழக்கத்துடன் கூட்டு பிரச்சாரம் நடைபெற்றது. எவ்வாறாயினும், இந்த கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறிவிட்டது. சமாஜவாதி ஆட்சியை பாஜகவிடம் இழந்தது.
சமாஜவாதி 311 இடங்களில் போட்டியிட்டு 47 இடங்களிலும், காங்கிரஸ் 114 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இரு கட்சிகளுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் இரண்டும் வேட்பாளர்களை நிறுத்திய பல இடங்களில் இருந்தன.
முன்னதாக, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை சமாஜவாதி ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.