மோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா ? அக்‌ஷய் குமார் - மோடி நேர்காணல்!

ஓய்வு பெற்ற பின்பு இதை நான் மீண்டும் தொடர்வேன் என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் மோடி.

Akshay Kumar interviews PM Narendra Modi : பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நேற்று இரவு ஒரு ட்வீட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், தேர்தலும் பிரச்சாரங்களும் உச்ச கட்டத்தில் இருக்கும் போது, அரசியல் சாராத ஒரு நேர்காணலை நான் பிரதமர் மோடியிடம் நடத்தியுள்ளேன். இது மிகவும் பெருமை கொள்ளக் கூடிய தருணம் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.  மோடியை பற்றி நீங்கள் அறிந்திடாத பல்வேறு விசயங்களை அறிந்திடநீங்கள் ஏ.என்.ஐ சேனலில் இந்த நேர்காணலை காணலாம் என்று கூறியிருந்தார்.

இந்த ட்வீட்டிற்கு முன்பு, இதற்கு முன்பு நான் அறிந்திடாத, செய்யாத ஒரு செயலில் ஈடுபட்டுள்ளேன். மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பதட்டமாகவும் உள்ளது. இது தொடர்பான முக்கிய தகவல்களுக்கு இணைந்திருங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

தேர்தல் நேரம் என்பதால், பலரும் அவர் கட்சியில் இணைந்து அரசியல் பணி ஆற்றப்போகின்றார்கள் என்று எண்ணிக் கொண்டனர்.

Akshay Kumar interviews PM Narendra Modi

மோடி பற்றி பலரும் அறியாத பல ருசிகர தகவல்கள் உங்களுக்காக இதோ!

நேர்காணலின் ஆரம்பத்திலேயே அதன் சாரம்சம் புரியும் படி, ஒரு பிரதமராக அல்லாமல் ஒரு தனிமனிதனாக மோடியைப் பற்றி அறிந்து கொள்ளப் போகின்றோம் என்று கூறியிருந்தார்.

நீங்கள் பிரதமர் ஆனது குறித்து ?

நான் பிரதமர் ஆவேன் என்று நினைக்கவும் இல்லை. ஒரு வேலை எனக்கு நல்ல வேளை கிடைத்திருந்தால், என் அம்மாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இனிப்புகளை வழங்கியிருப்பார்.

மோடியின் குழந்தை பிராயம் குறித்து !

சிறு வயதில் நான் அருகில் இருக்கும் நூலகத்திற்கு செல்வேன். பெரிய மனிதர்கள் பற்றி அதிகம் படிப்பேன். சீருடையில் இருக்கும் நபர்கள் மதிக்கப்படுவதை நான் பார்த்திருக்கின்றேன். குஜராத்தில் இருக்கும் சய்னிக் பள்ளிப் பற்றி படித்தேன். எங்கள் ஊரில் ஒரு பள்ளி பிரின்சிபல் இருந்தார். நான் அவரை நேரில் சந்தித்து பேசினேன். வாழ்க்கை குறித்து நிறைய பாடம் எடுத்தார் அவர். பின்பு நான் இமயமலை சென்றேன். என் மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்திற்கும் பதில் தேடி அலைந்தேன்.

நான் கோபப்படுவேன் ஆனால் அதை அடுத்தவர்கள் மீது காட்டமாட்டேன் : மோடி

கோபப்படுவதும் சோகமாவதும் மனித வாழ்க்கையில் இயல்பான ஒன்று. நான் முதல்வராக பல ஆண்டுகள் பணி புரிந்திருக்கின்றேன். ஒரு முறையும் மற்றவர்கள் மீது கோபப்படும் வாய்ப்பு கிடைத்ததில்லை. என்னுடைய வேலை முடிவதற்காக நான் யாரையும் மட்டம் தட்டியதில்லை. நான் கோபப்படுவேன் ஆனால் அதை அடுத்தவர்கள் மீது காட்டமாட்டேன். கோபப்பட்டால் என்னுடைய அலுவல் வேளைகளில் மாற்றங்கள் மட்டுமே உருவாகும்.

கோபத்தை குறைக்க என்ன செய்வீர்கள் ?

எனக்கு பிடிக்காத ஒன்று ஏதாவது நடந்தால், நான் தனியாக அமர்ந்து ஒரு காகிதத்தில் எழுத துவங்குவேன். நான் ஏன் அப்படி நடந்தேன். என்ன நடந்தது என்று எழுதி அதை கிழித்து எறிந்திடுவேன். மீண்டும் அதை படிக்க கூட முயற்சிக்க மாட்டேன். மீண்டும் எழுதுவேன். இப்படித்தான் என்னுடைய கோபத்தை கட்டுக்குள் கொண்டு வருவேன்.

உங்கள் அம்மாவை நீங்கள் பிரிந்திருப்பது குறித்து !

நான் பிரதமராக பதவியேற்ற பின்பு வீட்டை விட்டு வெளியே வந்திருந்தால் நிச்சயமாக இந்த பிரிவு மிகவும் வருந்தக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் நான் தான் சின்ன வயதிலேயே வெளியேறிவிட்டேனே.

யாருடனும் அதிக அட்டாச்ட்டாக இருக்கக் கூடாது என்பதற்கான பயிற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். இப்போதெல்லாம் நான் என் அம்மாவை அழைபேசியில் அழைத்தால், என்னிடம் பேசி உன் நேரத்தை ஏன் வீண் செய்கின்றாய் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

நிர்வாகத்தில் கடுமையான விதிகளை பின்பற்றுபவர் என்ற பிம்பம் பொய்யானது !

நிர்வாகத்தில் கடுமையான விதிகளை பின்பற்றுபவர் என்ற பிம்பம் பொய்யானது. நான் யாரையும் வேலை செய்யக் கூறி அழுத்தம் கொடுப்பதில்லை. முன்பெல்லாம் நாட்டின் பிரதமர் 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியேறிவிடுவார்.

ஆனால் நான் அதிகாலையில் அலுவலகத்திற்கு வந்தால் நள்ளிரவு வரை அங்கே தான் இருப்பேன். நான் வேலை செய்வதை பார்த்து மற்றவர்களும் வேலை செய்வார்கள். இந்த மாண்பினை கட்டாயப்படுத்தி மக்களிடம் திணிக்க இயலாது. நான் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றேன்.

எதிர்கட்சியில் எனக்கு நண்பர்களும் உண்டு – மோடி

எனக்கு எதிர்கட்சியிலும் நண்பர்கள் உண்டு. நான் அவர்களுடன் வருடத்திற்கு ஒரு முறையாவது மதிய உணவு உண்பது வழக்கம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. தேர்தல் நேரத்தில் கொஞ்சம் நெருக்கடியான உணர்வுகளை இது தரும்.

இருந்தாலும், மம்தா பானர்ஜீ எனக்கு வருடத்திற்கு ஒரு முறை குர்த்தா வாங்கி அனுப்புவார். வங்க தேச பிரதமர் எனக்கு பெங்காலி இனிப்புகளை அனுப்புவார் என்று மோடி கூறியுள்ளார்.

முதல்வராக இருந்த போது சம்பாதித்த சம்பளப் பணத்தை என்ன செய்தீர்கள் ?

நான் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னுடைய வங்கிக் கணக்கு வழக்குகளை என்னுடைய நிர்வாகி ஒருவர் நிர்வகித்தார். நான் பிரதமராக பொறுப்பேற்ற போது என்னுடைய சம்பள பணம் 21 லட்சத்தினை தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வந்த ப்யூன் மற்றும் ட்ரைவரின் மகள்களின் படிப்பிற்காக கொடுத்துவிட்டேன்.

நீங்கள் உண்மையாகவே குஜராத்தி தானா ?

இந்த கேள்வியை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தார் மோடி. ஏன் என்றால் குஜராத்திகள் அவர்களின் பணத்தை பாதுகாப்பதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று அக்‌ஷய் கூற பலமாக சிரித்தார் மோடி.

அலாவுதீனின் அற்புத விளக்கு உங்களுக்கு கிடைத்தால் ?

கல்வியாளர்களிடம் வருங்காலத்தில் அலாவுதீனின் அற்புத விளக்கு குறித்த பாடங்களை எடுக்கக் கூடாது என்றும், மாணவர்களுக்கு கடுமையாக உழைக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இந்த கேள்விக்கு பதில் அளித்தார் மோடி.

பிரதமராக டெல்லி வரும் போது, குஜராத்தில் இருந்து நீங்கள் எடுத்து வந்த மதிப்பு மிக்க பொருள் ?

மற்ற பிரதமர்கள் போல் அல்லாமல் நான் மிகவும் சிறப்பு மிக்க ஒன்றை எடுத்து வந்தேன். அது என்னுடைய முதலமைச்சர் அலுவலகம் கொடுத்த அனுபவம்.

பாரக் ஒபாமா கூட உங்களின் தூக்கம் குறித்து அதிக கவலை கொள்கின்றார்!

நான் நாள் ஒன்றிற்கு 3ல் இருந்து மூன்றரை மணி நேரம் மட்டுமே தூங்குவேன். என்னுடைய உடல் இதற்கு பழகிவிட்டது. ஒபாமா என்னுடைய நல்ல நண்பர். அவர் என்னிடம் “ஏன் இவ்வளவு குறைவான நேரம் மட்டுமே ஓய்வெடுக்கின்றீர்கள்! உங்களின் வேலை மீது நீங்கள் கொண்டுள்ள பற்று எங்களுக்கு புரிகின்றது. இருப்பினும் நீங்கள் குறைவான நேரம் துங்கக் கூடாது என்று கூறினார்” என்றார் மோடி.

நான் ஆயுர்வேதத்தை அதிகம் நம்புகின்றேன் !

அதிக விலையுள்ள மருந்துகள் எப்படி வேலை செய்யும் என்று எனக்கு தெரியாது. நான் ஆயுர்வேதத்தை நம்புகின்றேன். சுடுதண்ணீர் மட்டுமே குடிப்பேன். உடல்நிலை சரியில்லாமல் போனால் உணவு அருந்த மாட்டேன். சர்சோ க டெல் இரண்டு சொட்டினை மூக்கில் விடுவேன். அது என்னுடைய காய்ச்சலை சரியாக்கிவிடும்.

மோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்

என்னுடைய ஆடை குறித்தும் ஆங்காங்கே தவறான செய்திகள் வருகின்றன. நான் முதல்வர் ஆவதற்கு முன்பு வரை என்னுடைய உடைகளை நானே தான் துவைப்பேன். முழுக்கை குர்த்தாக்கள் உடுத்துவதால் என்னுடைய பையில் அதனை வைப்பதற்கு அதிக இடமும், துவைப்பதற்கு அதிக நேரமும் ஆவதால் தான் நான் அரைக் கை குர்த்தா போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.

நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பணம் அனுப்பவது குறித்து !

இன்று வரை என் அம்மா தான் எனக்கு பணம் அனுப்பி வருகிறார். அவருக்கு அதிக செலவுக்கான தேவைகள் இருப்பதில்லை . என்னிடம் இருந்து அவர் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. நான் என்னுடைய நாட்டையே குடும்பமாக ஏற்றுக் கொண்டேன். அதனுடைய முன்னேற்றத்திற்காக தான் பாடுபடவிரும்புகின்றேன்.

பிடித்த விளையாட்டு

தனிநபராக விளையாடாமல் குழுவாக விளையாடுவது தான் எனக்கு பிடிக்கும். ஏன் என்றால் அந்த குழு உங்களின் தனிநபர் வளர்ச்சிக்கு அதிக பங்காற்றும். கில்லி தண்டா விளையாடியுள்ளேன். என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் துணியையும் துவைத்துள்ளேன். அருகில் உள்ள கிணத்தில் நீச்சல் அடிப்பேன்.

சர்வதேச அரங்கில் பேசிய முதல் உரை குறித்து !

நான் அமெரிக்கா சென்றிருந்த போது சுஷ்மா ஸ்வராஜ் என்னிடம் உரையாற்றக் கூறினார். நான் என்னிடம் எழுதப்பட்ட உரை எதுவும் இல்லை என்றேன். பின்பு நான் என்ன பேச விரும்புகின்றேன் என்று கூறினேன். அவர் அதனை எழுதிக் கொடுத்தார்.

திரைப்படங்கள் பார்ப்பதற்கு நேரம் இல்லை

என்னுடைய கிராமத்தில் நான் நிறைய படம் பார்த்துள்ளேன். குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அமிதாப்புடன் பா படமும், அனுப்பம் கேருடன் ஏ வெனஸ்டே படமும் பார்த்தேன். தற்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கு எனக்கு நேரம் இல்லை.

மன அமைதி பெற என்ன செய்வீர்கள் !

முன்பெல்லாம் சில பழக்கங்கள் எனக்கு இருந்தன. ஆனால் தற்போது அதை செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை. காலையிலும் மாலையிலும் தேநீர் அருந்துவேன். வெளிச்சமான அறையில் அமர்ந்திருப்பேன். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வெளியுலக இணைப்பு ஏதும் இல்லாமல் எங்காவது சென்றூ வருவேன். ஓய்வு பெற்ற பின்பு இதை நான் மீண்டும் தொடர்வேன் என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் மோடி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close