Cauvery River : மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பகிர்வு தொடர்பாக, கர்நாடகாவின் நலன்களை பாதுகாப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கர்நாடக மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த உள்ளது. தமிழக அரசு, காவிரி ஆற்றுப்படுகையில் பெறப்படும் உபரி நீரை முறையாக பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய மற்றும் பெரிய நீர்பாசன விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடகாவின் நீர் விவகாரங்கள் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை கவனித்து வரும் நீர்வளத் துறை மூத்த அதிகாரிகள், தொழில்நுட்ப ஆலோசகர்கள் மற்றும் சட்டக் குழுவினருடன் விரிவான ஆலோசனைகளை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது.
தமிழக அரசு காவிரி-வெள்ளாறு-வைகை-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டியது. காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை பயன்படுத்தி தெற்கு பகுதிகளுக்கு விநியோகிக்க திட்டங்களை தீட்டி வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடியூரப்பாவிடம் அனுமதி கோருவோம். எதிர்கட்சி தலைவர் மற்றும் சில தலைவர்களுடன் சட்டவல்லுநர்களும் பங்கேற்பார்கள் என்று ஜர்கிஹோலி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழகம் ஒரு தலைபட்சமாக முடிவெடுத்துள்ளது. இதனால் கர்நாடகாவின் நலனில் பாதிப்பு ஏற்படும். தமிழ்நாட்டின் பங்கான 177.25 டி.எம்.சி.டி.க்கு மேலான உபரி நீரிலும் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil