By: WebDesk
Updated: October 11, 2018, 02:53:36 PM
எம்.ஜே அக்பர் MeToo
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பெண்கள் வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பணியிடத்தில் பாலியல் ரீதியாக பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கையேடுகளை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜே அக்பர் MeToo புகார்
மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் தன்னுடைய பணியை ஒரு பத்திரிக்கையாளராக தொடங்கியவர். அவர் செய்து வந்த வேலையில் அவர் காட்டிய பற்றுதல், நிறைய இளைஞர்களை பத்திரிக்கையாளராகவும், ஊடகவியலாளராகவும் மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியன் ஏஜ் பத்திரிக்கையின் ஆசிரியராக அவர் இருந்த போது, தன்னுடைய இச்சைக்கு, புதிதாக ஊடகத்துறையில் கால் பதிக்கும் பெண்களை துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி இன்று, எம்.ஜே. அக்பர் மீதான குற்றச்சாட்டுகள் உச்சத்தில் இருக்கும் போது “பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் மீதான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் மூலம் இது அடிக்கடி நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. மீடியாவில் மட்டும் அல்ல அரசியல் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்களிலும் இது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்று மேனகா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் பெண்கள் இது பற்றி அதிகம் பேசுவது கிடையாது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் அவர்களை கேளிக்கைக்கு உள்ளாக்குவார்கள் மற்றும் அவர்களின் நடத்தைகள் மீது சந்தேகம் எழும். இதனால் தான் அவர்கள் இது போன்ற பிரச்சனைகள் குறித்து அதிகம் பேசுவதில்லை.