சிபிஐ அமைப்பை சிதைக்க முயற்சிகள் நடந்ததாக இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் பிரதான புலனாய்வு அமைப்பு, சி.பி.ஐ.! இன்னமும் மாநில விசாரணை ஏஜென்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் தருணத்தில் சிபிஐ விசாரணை கோருவது நாடு முழுக்க நடைமுறை. அந்த அமைப்பின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு இது.
ஆனால் சி.பி.ஐ.யில் நம்பர் 1 அதிகாரிக்கும், நம்பர் 2 அதிகாரிக்கும் இடையே மூண்ட மோதல், அந்த அமைப்பின் பெருமையை சேதாரமாக்கியது. சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஸ் அஸ்தானா ஆகியோரே அவர்கள்.
இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும், ஊழல் விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் இல்லத்தில் நியமனக்குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் தலைமை நீதிபதியின் பிரதிநிதியாக நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் நியமனக்குழு விவாதித்தது. கூட்டத்தின் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நியமனக்குழுவின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த நடவடிக்கையை கண்டித்தார்.
இதற்கிடையே அலோக் வர்மா முக்கியத்துவம் இல்லாத வேறு துறை பதவிக்கு மாற்றப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘என் மீது பகைமை கொண்ட ஒரே ஒருவர் சொன்ன அடிப்படையற்ற புகார் மீது இந்த நடவடிக்கை எடுத்திருப்பது கவலை தருகிறது. சிபிஐ அமைப்பை சிதைக்க முயற்சிகள் நடந்தன. அந்த அமைப்பின் இறையாண்மையை காப்பாற்ற நான் விரும்பினேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தாலும், சட்டப்படியான எனது செயல்பாடுகள் தொடரும்’ என்றார்.