ஆக்ராவில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஊதா நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாணவர்களின் மார்க் சீட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்கலைகழக மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பீமராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு வரை ஊதா நிறத்தில் மாணவர்களின் மார்க் சீட் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு முதல், 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு காவி நிறத்தில் உள்ள மார்க் சீட் வழங்கப்பட்டுள்ளது. 1000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில், 2017 -18ம் ஆண்டு படித்து முடித்த முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு ஊதா நிறத்தில் மார்க் சீட் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு காவி நிறத்தில் மார்க் சீட் வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அரசியல் பின்னணியைக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது குறித்து நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும் என்றும், இந்த காவி நிறத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்கள், அரசுப் பேருந்துகள், டிவைடர்ஸ், மின் கம்பங்கள், சுங்க கட்டண மையங்கள் உள்பட பல இடங்கள் காவி நிறமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள்து என்பது குறிப்பிடத்தக்கது.