/indian-express-tamil/media/media_files/2025/05/19/oW2SVA7p0sMnlZ2Hlbsf.jpg)
Puducherry
இந்தியாவில் பாகிஸ்தான் உளவாளிகள் பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில், புதுச்சேரி விமான நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான ரேச்சல் அனி என்ற கண் மருத்துவர், புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள அரவிந்தர் கண் மருத்துவமனையின் மருத்துவர் வெங்கடேசனை சந்திக்க கடந்த 11-ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் புதுச்சேரிக்கு வந்துள்ளார். அரவிந்தர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த அவர், மதுரை உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று மீண்டும் புதுச்சேரி திரும்பினார்.
வெள்ளிக்கிழமை அமெரிக்கா செல்வதற்காக இன்று மதியம் 1:10 மணிக்கு ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏற புதுச்சேரி விமான நிலையம் வந்தபோது, வழக்கமான உடைமை சோதனையின்போது அவரது பையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் சென்னை இண்டிகோ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது தடை செய்யப்பட்ட தொலைபேசி என்பதால் லாஸ்பேட்டை போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், ஆய்வாளர் இனியன் மற்றும் ஐ.ஆர்.பி.என் கமாண்டோ போலீசார், டாக்டர் ரேச்சலின் உடைமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.
அந்த தொலைபேசியை ஆய்வு செய்தபோது, அது இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் மற்றும் இருப்பிடங்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியவருவது தெரியவந்தது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக் கருதிய போலீசார், அந்த தொலைபேசியை பறிமுதல் செய்தனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த சேட்டிலைட் போன் பயன்பாட்டில் இருந்தாலும், இந்தியாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த தொலைபேசியை பயன்படுத்தியதற்காக டாக்டர் ரேச்சல் அனி மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அரவிந்தர் கண் மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசன் வரவழைக்கப்பட்டு, அமெரிக்க பெண் மருத்துவர் அவரிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி விமான நிலையத்தில் அமெரிக்க மருத்துவரிடம் செயற்கைக்கோள் தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய உளவு அமைப்பான ஐ.பி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.