Mohamed Thaver
தெற்கு மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள காட்டில் 50 வயது பெண் ஒருவர் அமெரிக்க பாஸ்போர்ட்டுடன் கால்கள் மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஒரு மேய்ப்பர் அந்தப் பெண்ணின் அழுகையைக் கேட்டு போலீசாருக்கு தகவல் கொடுப்பதற்கு முன்பு அந்தப் பெண் கிட்டத்தட்ட 48 மணிநேரம் அங்கு இருந்திருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.
ஆங்கிலத்தில் படிக்க:
அந்தப் பெண்ணின் அமெரிக்க பாஸ்போர்ட்டின் புகைப்பட நகல் மற்றும் ஆதார் கார்டின் அடிப்படையில் அவர் லலிதா கயி என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார், ஆதார் அட்டையில் தமிழ்நாட்டு முகவரி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் பேசும் நிலையில் இல்லை, எனவே கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்தப் பெண்ணின் பையில் அவர் "எனது முன்னாள் கணவர்" என்று எழுதிய ஒரு குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்ததாக ஒரு அதிகாரி கூறினார். “அமெரிக்காவில் பிறந்ததாகத் தோன்றும் அந்தப் பெண், கோவாவிலும் சில காலம் தங்கியிருப்பதைக் கண்டறிந்துள்ளோம். கடந்த சில மாதங்களில் அந்தப் பெண் யாருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
மும்பையில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள சவந்த்வாடியில் உள்ள சோனுர்லி கிராமத்தில் ஜூலை 27 மாலை அந்தப் பெண் உதவிக்காக அழுவதை ஒரு மேய்ப்பர் கேட்டதாக அந்த அதிகாரி கூறினார். மேய்ப்பர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சங்கிலியை உடைத்து அந்தப் பெண்ணை மீட்டனர். பின்னர் போலீசார் அந்த பெண்ணை சாவந்த்வாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கிருந்து மற்றொரு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், மோசமான உடல் மற்றும் மன நிலையின் காரணமாக, உயர் சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லூரியில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண் அபாய கட்டத்தை தாண்டிவிட்ட நிலையில், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணிடம் இருந்து மருத்துவச் சீட்டையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் விசா காலாவதியாகிவிட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக அவர் இந்தியாவில் இருந்து வருவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நீரிழப்பு மற்றும் கடந்த இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாததால் பலவீனமாக இருந்ததால் அந்த பெண் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த அவரது முன்னாள் கணவரை போலீசார் தேடி வருகின்றனர், மேலும் அந்தக் கணவர் தமிழ்நாட்டிற்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“