Advertisment

அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி எடுத்துக் கொள்வோர் எண்ணிக்கை சரிவு; மாநிலங்களுக்கு சப்ளையை நிறுத்திய மத்திய அரசு

தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளதால், மொத்த கொள்முதலால் விரயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தம்; மாநிலங்களே வாங்கிக்கொள்ள அறிவுறுத்தல்

author-image
WebDesk
New Update
covid vaccine

கொரோனா தடுப்பூசி

Anonna Dutt 

Advertisment

கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் ஜனவரி 2021 இல் தொடங்கிய கிட்டத்தட்ட 27 மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் முதல் மாநிலங்களுக்கு டோஸ் வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது, மேலும் மாநிலங்கள் தாங்களாகவே, உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் மிகக்குறைவாகவே உள்ளதால், மொத்த கொள்முதலால் விரயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: 1,000 கடிதங்கள், 20 ஆண்டுகள்: பாடப் புத்தகங்களில் அரிவாள் செல் இரத்த சோகைக்கு இடம் தேடும் போராட்டம்

“... மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன் அனுமதியின்றி, தேவையான கோவிட் தடுப்பூசி அளவை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று மாநிலங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று கோவிட்-19 நிலைமையை மறுஆய்வு செய்ய பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பி.கே மிஸ்ராவால் கூட்டப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டோஸ்களுக்கான செலவினம் மத்திய அரசால் செலுத்தப்படுமா என்பது அறிக்கையில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் சொந்த பட்ஜெட் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறினர்.

publive-image

12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு முதன்மை தடுப்பூசி ஊசிகளையும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அல்லது முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாவது முன்னெச்சரிக்கை டோஸையும் வழங்குவதற்கான டோஸ்களை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கியது. ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை டோஸ்கள் மத்திய அரசால் வழங்கப்பட்டன.

பெரும்பாலான டோஸ்கள் மார்ச் இறுதியில் காலாவதியான நிலையில், பல மாநிலங்கள் ஸ்டாக்-அவுட்களை எதிர்கொள்கின்றன.

ஹரியானாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த மாத தொடக்கத்தில் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில், மத்திய அரசு இனி தடுப்பூசி டோஸ்களை வழங்காது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே மாநில அரசு தாங்களாகவே மருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதுவரை அரசு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் கார்பெவாக்ஸ் ஆகிய மூன்று தடுப்பூசிகளை மட்டுமே வாங்க உள்ளோம்,” என்று கூறினார்.

டெல்லியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஸ்டாக் அவுட் இருப்பதை உறுதிப்படுத்தினார்: “எங்களிடம் கையிருப்பில் இருந்த தடுப்பூசி டோஸ்கள் மார்ச் இறுதிக்குள் காலாவதியாகிவிடும் என்பதால், நாங்கள் அதை கடந்த மாதம் முழுவதும் பயன்படுத்தினோம். இப்போது அரசின் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இல்லை. இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகளை மாநில அரசு வாங்க உள்ளது. அதற்கான செயல்முறை நடந்து வருகிறது” என்று கூறினார்.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டுக்கான உற்பத்தி "குறைந்த தேவை காரணமாக நிறுத்தப்பட்டதால்" டோஸ்கள் தற்போது கிடைக்கவில்லை என்று அதிகாரி கூறினார். மேலும், ''நாங்கள் கொள்முதல் செய்தாலும், தடுப்பூசி போட மக்கள் முன்வருவதில்லை. இதனால்தான் மொத்தமாக கொள்முதல் செய்வதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனியார் மையங்களில் கூட போதிய பயனாளிகள் கிடைப்பதில்லை,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தினசரி அளிக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் ஒரு வாரத்திற்கு சராசரியாக 46,000 டோஸ்கள் வழங்கப்பட்ட நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் 12,358 ஆகவும், இரண்டாவது வாரத்தில் 2,983 ஆகவும், மூன்றாவது வாரத்தில் 2,664 ஆகவும் குறைந்துள்ளதாக அரசாங்கத்தின் CoWIN போர்ட்டலின் தரவுகள் தெரிவிக்கின்றன. கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பு இருந்தபோதிலும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறைந்துள்ளது. பொதுவாக நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் போதெல்லாம் தடுப்பூசி போடுவதில் அதிகரிப்பு இருக்கும்.

சத்தீஸ்கரை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், “அரசாங்கம் இனி டோஸ் வழங்காது. பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் இப்போது 50,000 டோஸ் கேட்டுள்ளோம், ஆனால் அது ‘கேட்ட’ நிலையில் மட்டுமே உள்ளது, எதுவும் நடக்கவில்லை. இப்போது மாநிலங்கள் தடுப்பூசி போட விரும்பினால், மாநிலங்களே மருந்துகளை வாங்க வேண்டும். தடுப்பூசிகளைப் பெற மக்கள் வராததாலும், பல டோஸ்கள் வீணாகிவிட்டதாலும், இந்த விஷயத்தில் நான் மத்திய அரசைக் குறை கூறமாட்டேன்,” என்று கூறினார்.

மேலும், “மாநிலங்கள் சில டோஸ்களை வாங்க முதலீடு செய்யலாம், 50,000 என்பது வாங்க முடிந்த அளவு, ஒரு டோஸுக்கு ரூ 200 வீதம் ரூ 1 கோடி வரை செலவாகும். ஆனால், அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றால், மாநிலங்களால் செலவை தாங்க முடியாமல் போகலாம்,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பீகார் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அதிகாரிகளும் கையிருப்பு இல்லாததை உறுதிப்படுத்தினர், ஆனால் தங்கள் அரசாங்கங்கள் தடுப்பூசிகளை வாங்கவில்லை என்று கூறினார். பீகாரைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில், அரசு மையங்களில் ஸ்டாக் இல்லை, ஆனால் தடுப்பூசிகள் தனியார் மையங்களில் உள்ளன, மக்கள் அதை அங்கே பெறலாம், என்று கூறினார்.

யூனியன் பிரதேச நிர்வாகம் ஏற்கனவே மூன்றாவது முன்னெச்சரிக்கை டோஸுடன் 100% பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது என்று கூறிய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அதிகாரி, “நோய் அல்லது பிற காரணங்களுக்காக தடுப்பூசி பெற முடியாமல் போனவர்கள் மிகக் குறைவு. விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு தனியார் நிறுவனங்களை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம், ஆனால் மொத்தமாக வாங்குவது எங்களுக்கு கடினம்,” என்று கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், கோவிட்-19 தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் 85% தொகையை மத்திய அரசு ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது, 1.8 கோடி டோஸ்கள் இன்னும் கையிருப்பில் உள்ளன.

இதற்கிடையில், கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கையில் இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு, புதன்கிழமை மீண்டும் பாதிப்புகள் 10,000-ஐத் தாண்டியதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை நடந்த கூட்டத்தில், கேரளா, டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் அதிகமான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதன்மைச் செயலாளர் மிஸ்ராவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்புகளில் கிட்டத்தட்ட 92% பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பு, தளவாடங்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசி பிரச்சாரத்தின் தயார்நிலையின் நிலை குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இடங்களை அடையாளம் காண, உள்ளூர் அலைகளை நிர்வகிக்கவும், காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளைக் கண்காணிக்கவும் துணை மாவட்ட அளவில் மாநிலங்களைத் தயாராக இருக்குமாறு மிஸ்ரா கேட்டுக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Covid 19 India Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment