நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் சுத்தமாக, ஃப்ரெஷ்ஷாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதைத் தான் முதலில் சோதிப்போம்.
கலப்படமே இல்லாத உணவு என்றால் மீன் இறைச்சி மட்டும் தான் என்று பரவலாக மக்கள் மனதில் இருந்த நம்பிக்கையினை உடைத்தது மீன்களை பதப்படுத்தும் முறை.
மருத்துவமனை பிணவறையில், பிணங்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன்கள் பதப்படுத்தப்படுகிறது என்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு முன்பு ஒடிசா அரசு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்களுக்குத் தடை விதித்தது.
மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கோவாவில் மீன் பிடிப்பதற்கு தடை அமுலில் உள்ளது. இச்சமயத்தில் ஃபார்மலின் வேதிப் பொருட்களினால் ஏற்பட்ட அச்சத்தினை நீக்க வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து இருக்கிறது கோவா அரசு. இதை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த காரணங்களால் மீன் உணவு வியாபாரங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கூறிய கோவாவின் முதல்வர் மனோகர் பரிக்கர், மீன்பிடித்தலுக்கான தடை ஆகஸ்ட் மாதம் நீங்கிய பின்பு இந்த பிரச்சனைகள் இருக்காது என்று கூறினார்.
ஃபார்மலின் ரசாயனப் பொருட்களின் சேர்க்கை குறித்து மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கோவாவில் மீன்கள் பிடிப்பதற்கான தடைக்காலம் முடிந்தவுடன், எந்த ஒரு பிரச்சனையும் இன்றி மக்கள் மீன் உணவினை ரசாயனம் ஏதும் இன்றி உண்ணலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம், கோவாவில் இருக்கும் மர்கோவா மற்றும் பனாஜி ஆகிய மீன் சந்தைகளில் அரசு அதிகாரிகள் சோதனை செய்த போது, மீன்களில் ஃபார்மலின் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவினை அறிவித்திருகிறார் மனோகர் பரிக்கர்.