ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததாக சர்ச்சை எழுந்த ஒரு நாளுக்குப் பிறகு, பள்ளிக் கல்வி அமைச்சர் மதன் திலாவர், ஆடைக் கட்டுப்பாடு பின்பற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். உள்துறை இணை அமைச்சர் ஜவஹர்சிங் பெத்தம், மாணவர்கள் ஊட்-பதாங் (பொருத்தமில்லாத) உடையில் பள்ளிக்கு வரக்கூடாது என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Amid hijab row, more Rajasthan ministers warn schools, students to ‘follow dress code’
இந்த வார தொடக்கத்தில், ராஜஸ்தானின் ஹவா மஹாலைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ., பால்முகுந்த் ஆச்சார்யா, அரசுப் பள்ளியில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், கேபினட் அமைச்சர் கிரோடி லால் மீனா, முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஹிஜாப் அணிவதற்கான தடையை அமல்படுத்துவது குறித்து பேசுவதாகக் கூறினார்.
செவ்வாயன்று, "அரசு உத்தரவுகள் (ஆடைக் கட்டுப்பாடு குறித்து) பள்ளிகளிலும் பிற அரசு நிறுவனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும், மேலும் மாணவர்கள் ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்," என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறினார். மேலும், ஆடைக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கான உத்தரவுகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், "எங்கே முறைகேடுகள் கண்டறியப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறினார்.
எக்ஸ்பிரஸ் சிறப்புச் செய்தி: https://tamil.indianexpress.com/explained/its-polls-on-hold-mumbai-civic-body-gave-rs-500-crore-for-mumbai-upgrade-all-went-to-ruling-bjp-sena-shinde-mlas-none-to-opposition-2408310
பள்ளிகளில் தொழுகை நடத்துவதாகக் கூறப்படும் மாணவர்கள் குறித்து, மதன் திலாவர், "பள்ளிகளில் மத மாற்றத்தை அனுமதிக்க மாட்டோம், மதமாற்றத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
அமைச்சர் ஜவஹர்சிங் பெத்தம் பேசுகையில், ''கல்வித்துறை குறிப்பிட்டுள்ள ஆடை கட்டுப்பாடு குறித்து, அவ்வப்போது அரசு உத்தரவுகள் வந்துள்ளன. நாங்களும் படிக்கும் போது பள்ளி உடையில்தான் செல்வோம். மேலும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பள்ளி ஆடைகளை வழங்குவதால் மாணவர்கள் அந்த உடையில் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட வேண்டும், என்று கூறினார். மேலும், பள்ளிகள் கல்விக்கான கோயில் என்பதால் மாணவர்கள் “ஊட்-பதாங்” (பொருத்தமில்லாத) உடையில் பள்ளிகளுக்கு வரக்கூடாது என்றும் இது மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் “சிறந்த மனநிலையை” ஏற்படுத்தும் என்றும் ஜவஹர்சிங் பெத்தம் கூறினார்.
இதற்கிடையில், விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பும் பள்ளிகளில் ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தது. வி.எச்.பி.,யின் க்ஷேத்திர மந்திரி சுரேஷ் உபாத்யாய் செவ்வாயன்று, ஒழுக்கத்தை உறுதிப்படுத்த பள்ளியில் சீரான ஆடைகள் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், பள்ளிகளில் சீருடைகளின் நோக்கம் மாணவர்களிடையே சமத்துவ உணர்வை உருவாக்குவதும், அவர்களின் ஆடை காரணமாக சமூக, பொருளாதார, மத அல்லது வேறுவிதமான பாகுபாடுகளைத் தடுப்பதும் ஆகும் என்றும் சுரேஷ் உபாத்யாய் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.