மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மகள் கோவாவில் சொந்தமாக பார் நடத்துவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவந்தனர்.
இந்த நிலையில் வழக்குரைஞர் ஐரஸ் ரோட்ரிகஸ் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், ‘சம்பந்தப்பட்ட பார் அந்தோணி டி சௌசா என்பவர் பெயரில் நடத்தப்பட்டுவருகிறது.
ஆனால் அந்தோணி டி சௌசா 2021ஆம் ஆண்டு மே மாதம் இறந்துவிட்டார். இறந்துவிட்டவரின் பெயரில் ஜூன் மாதம் பார் நடத்தும் உரிமம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அந்தோணி டி சௌசாவின் மனைவி மெர்லின் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
நானும் இந்த நிறுவனத்தில் உரிமையாளராக உள்ளேன். கணவரின் இறப்புக்கு பின்னர் இந்தச் சொத்து சட்ட ரீதியாக எனக்குவருகிறது. பார் நடத்தும் உரிமம் பெறும்போதும் இதனை நான் தெரிவித்துள்ளேன்” என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக மெர்லின் குடும்ப வழக்குரைஞர் பென்னி நாசரேத் கூறுகையில், ‘இந்த சிவில் சொத்து போர்த்துகீசியர்கள் சட்டத்தின்கீழ் வருகிறது. இது போர்த்துகீசியர்களின் சிவில் சட்டம் 1867இன் கீழ் வருவதால், இந்தச் சொத்து சட்ட ரீதியாக மெர்லினுக்கு வருகிறது” என்றார்.
மேலும் இந்த நிறுவனத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஸ்மிருதி இரானி உறவினர்கள் அல்லது மகளுக்கு எந்த உரிமையும் இல்லை என மெர்லின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் ஸ்மிருதி இரானி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மேலும் ஸ்மிருதி இரானியின் மகளை இளவயது தொழில்முனைவோர் என்றும் காங்கிரஸார் கூறிவந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, ‘மக்களவை தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தேன் என்பதற்காக எனது 18 வயது மகளை குறிவைத்து தாக்குகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“