திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் தலைமையிலான முந்தைய அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் நேற்று வியாழக்கிழமை வெளியாகியது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Amid row over Tirupati laddoos, Health Minister Nadda seeks report, says govt will take suitable action
இதன்படி, திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேவஸ்தானம் அறிக்கை அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்தார்.
ஜே.பி நட்டா பேச்சு
இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்படுவது குறித்து முழு அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தப் பிரச்சினையை நான் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நான் இன்று சந்திரபாபு நாயுடுவிடம் பேசி முழு அறிக்கையையும் அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன்,” என்று மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் 100 நாட்களைப் பற்றிய செய்தியாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா கூறினார்.
உணவில் கலப்படம் செய்வது தொடர்பாக தடுப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து பேசுகையில்: “அதைச் சொல்வது மிகவும் கடினம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) அதைச் செயல்படுத்தி வருகிறது. சோதனை வசதிகளின் ஒவ்வொரு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் எங்களிடம் காசோலைகள் உள்ளன. மேலும் பல சான்றிதழ்களும் உள்ளன. இந்த சம்பவம் பற்றி, அதன் விவரங்களை கேட்டு வருகிறேன், அதன்படி நாங்கள் முடிவு செய்வோம்." என்றும் ஜே.பி நட்டா கூறினார்.
இதற்கிடையில், கட்சி வேறுபாடுகளை தாண்டி அரசியல் தலைவர்களின் எதிர்வினைகளைப் பெற்று வரும் திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தாக்கல் செய்த மனுவை செப்டம்பர் 25 ஆம் தேதி விசாரிக்க ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த விஷயத்தைச் சுற்றியுள்ள உண்மையை வெளிக்கொணருவதற்காக தனது மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்று ஒய்.வி.சுப்பா ரெட்டி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், வருகிற புதன்கிழமை இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“