ஷாஜு ஃபிலிப்
CITU என்றழைக்கப்படும் இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் அழைக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தம், கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் கேரளாவில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை முற்றிலும் சீர் குலைத்துள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள 611 கிளைகளில் 300 கிளைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வங்கி சாரா மற்றும் தனியார் நிதி ஊழியர் சங்கத்தை (NBPFEA) ஒப்புக் கொள்ள முத்தூட் நிதி மறுத்துவிட்டதே, இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய அம்சமாகும்.
ஆளும் சிபிஎம் அரசுடன் இணைந்த தொழிற்சங்கமான சிஐடியூ, செவ்வாயன்று முத்தூட் எம்.டி ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அவரது ஊழியர்கள் கொச்சியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடுத்தது. இதனால், அலெக்சாண்டர் அலுவலகத்தின் முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். தொழிலாளர்கள் "வேலை செய்யும் உரிமை" போன்ற பலகைகளை வைத்திருந்தனர்.
ஊடகங்களிடம் பின்னர் பேசிய அலெக்சாண்டர், "எங்கள் சொந்த மாநிலத்தில் அலுவலகங்களைத் திறக்க எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆரப்பாட்டம் காரணமாக எங்களால் செயல்பட முடியாத கிளைகளை மூட முடிவு செய்துள்ளோம். இது ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தப்படும்" என்றார்.
“இரண்டரை ஆண்டுகளில், நாங்கள் எட்டு முறை போராட்டத்தை எதிர்கொண்டோம். இப்படியிருந்தால் நாங்கள் இதை கேரளாவில் நடத்த முடியாது. தயவுசெய்து எங்களை வேறொரு இடத்தில் நடத்த அனுமதிக்கவும்" என்றார்.
உள்ளூர் சி.ஐ.டி.யு குழுக்கள், முத்தூட் நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு முன்னால் கூடி, அலுவலகங்களை திறப்பதற்கு எதிராக ஊழியர்களை அச்சுறுத்தியதாக மாநிலம் முழுவதும் இருந்து செய்திகள் வந்தன.
முத்தூட் நிதி இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாபு ஜான், கேரளாவில் 2,850 பேரில் 220 ஊழியர்கள் மட்டுமே சங்கத்தில் சேர்ந்துள்ளனர் என்றார். "இந்தியா முழுவதும் எங்களுக்கு 35,000 ஊழியர்கள் உள்ளனர், நாங்கள் கேரளாவில் மட்டுமே சிக்கலை எதிர்கொள்கிறோம். எங்கள் ஊழியர்களில் பெரும்பாலானவர்களுக்கு சேவை மற்றும் சம்பள நிலைமைகள் குறித்து எந்த புகாரும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில், இழப்பில் இயங்கும் 200 கிளைகள் மற்ற கிளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு ஊழியர் கூட பணிநீக்கம் செய்யப்படவில்லை. இருப்பினும், இதில் சிஐடியு தலையிட விரும்பியது. NBPFEA மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களின் ஆதரவைக் கொண்டுள்ளது. எங்கள் ஊழியர்கள் போராட்டத்திற்கு எதிரானவர்கள், ஆனால் எங்கள் பணிகளை தடுக்க, சிஐடியு உள்ளூர் குண்டர்கள் மற்றும் வெளியில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது” என்று அவர் கூறினார்.
சிஐடியு மாநில பொதுச் செயலாளரும், சிபிஐ (எம்) மத்திய குழு உறுப்பினருமான எலமரம் கரீம் கூறுகையில், தொழிற்சங்கத்தில் சேர்ந்த ஊழியர்களை நிர்வாகம் பழி வாங்கியது. தெளிவான சம்பள அமைப்பு இல்லை. தொழிற்சங்க உறுப்பினர்கள் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளிப்படையாக வெளியே வர தயங்கும் பெரும்பான்மையான ஊழியர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது," என்றார்.
தொழிற்சங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து முத்தூட் நிறுவனம், தங்கள் ஊழியர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கரீம் தெரிவித்தார். "எங்களுக்கு போதுமான ஆதரவு கிடைத்தால், நாங்கள் போராட்டத்தை திரும்பப் பெற தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
தொழிற்சங்கத்தின் குறுக்கீடு, நிறுவனத்தின் வணிகத்தில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று ஜான் கூறினார். "கேரளாவில் எங்கள் வணிகத்தின் பங்கு மூன்று ஆண்டுகளில் 11 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், கேரளாவுக்கு வெளியே 3,900 கிளைகளில் வலுவான வளர்ச்சி காரணமாக நிறுவனத்தின் மொத்த வணிகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. முக்கிய சலுகைகளைத் தவிர குறைந்தபட்ச ஊதியத்திற்கு மேலாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. முத்தூட் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் சேவை நிலைமைகள் வேறு எந்த நிறுவனங்களுடனும் இணையாகவே உள்ளன" என்று அவர் கூறினார்.
சிஐடியு தலைவரான தொழிலாளர் அமைச்சர் டி பி ராமகிருஷ்ணனை இதுகுறித்த கருத்துக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. தொழிலாளர் ஆணையம் ஆகஸ்ட் 17 அன்று ஆலோசனை நடத்தியது என்றும், ஆனால் முத்தூட் எந்தவொரு இணக்கமான தீர்வையும் கொண்டு வரவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
"எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத இரண்டு நபர்களால் இந்த நிறுவனம் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. உயர் நிர்வாகம் இந்த விவாதத்திலிருந்து விலகி உள்ளது. தொழிற்சங்கத்தை ஒப்புக் கொள்ள அவர்கள் தயங்குவதே அடிப்படை பிரச்சனை. புதன்கிழமை மற்றொரு கூட்டத்தை நாங்கள் கூட்டியுள்ளோம்,” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.