மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயும் தொடர்பில் உள்ளன. அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவரும் எம்.பி.,யுமான திலிப் கோஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இந்திய உரை மற்றும் மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கில ஆவணங்களை அனுப்பி வைக்கும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா ஆகியோர் தனித்தனியே அறிக்கை கேட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சுடசுட பேச்சுகளுக்கு சொந்தக்காரர் திலிப் கோஷ். இவர் பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவரின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் பலராலும் விமர்சிக்கப்பட்டன.
இந்த நிலையில் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டு, தேசிய அளவில் இவருக்கு கட்சியில் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர் வகித்த மாநில தலைவர் பதவி சுகந்தா மஜூம்தார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் திலிப் கோஷ் அதிருப்தியில் இருப்பதாகவும், திரிணாமுல் காங்கிரஸில் இணையப் போவதாகவும் செய்திகள் உலாவின. இந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த திலிப் கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல். ஆகவேதான் இதுபோன்ற வதந்திகளை பரப்பிவிடுகின்றனர்” என்றார்.
இந்த நிலையில் அண்மையில், “சிபிஐ அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் தொடர்பில் உள்ளனர். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேர்மையாக நடக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில் திலிப் கோஷின் பேச்சுக்கு, மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சந்தானு சென், “சிபிஐ தொடர்பான திலிப் கோஷின் கருத்து வரவேற்கக் கூடியது.
சிபிஐ பணிகள் என்னென்ன அதன் அதிகாரம் என்னென்ன என்பது குறித்தும் நாட்டு மக்களுக்கு அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் சிபிஐ அதிகாரிகள் பாரப்பட்சமாகவே செயல்படுகின்றனர்.
குற்றச்சாட்டு வலுவாக உள்ள நிலையிலும் பாஜக தலைவர்களான சுவேந்து ஆதிகாரி உள்ளிட்டோரிடம் எந்த விசாரணையும் இதுவரை நடத்தவில்லை. மேலும் சிபிஐ-யால் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்பதை திலிப் கோஷின் பேச்சில் இருந்து அறிந்து கொள்ளலாம்” என்றார்.
இதற்கிடையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) இது தொடர்பாக விளக்கம் அளித்த திலிப் கோஷ், “நான் கூறியது சிபிஐயில் உள்ள நேர்மையற்ற அதிகாரிகளின் ஆளுங்கட்சியின் தொடர்பு குறித்து.
கடந்த காலங்களில் இருந்தே அவர்கள் திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்பில் உள்ளனர். இதுவரை பல்வேறு வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் கூட சிபிஐ அலுவலக வளாகத்தில் சிபிஐக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளேன். தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை” என்றார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில், திலிப் கோஷின் இந்தி மற்றும் ஆங்கில உரையாடல்களை மாநில தலைமையிடம் கட்சியின் தேசியத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.