2019-ம் புல்வாமா தாக்குதலின் போது மத்திய அரசு தவறிழைத்ததாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அத்தகைய கருத்துகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று சனிக்கிழமை கூறினார்.
“நம்முடன் இல்லாத பிறகுதான் அவர்கள் இதையெல்லாம் ஏன் நினைவில் கொள்கிறார்கள் என்று நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது ஏன் இந்த உணர்வு எழவில்லை? இந்த கருத்துக்களின் நம்பகத்தன்மையை மக்களும் பத்திரிகையாளர்களும் ஆய்வு செய்ய வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால், அவர் கவர்னராக இருந்தபோது ஏன் அமைதியாக இருந்தார்” என்று இந்தியா டுடே ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அமித்ஷா கூறினார்.
சத்யபால் மாலிக்கைத் தொடர்பு கொண்டபோது, ஆட்சியில் இருந்தபோது இந்தப் பிரச்சினையை எழுப்பியதாகக் கூறினார். “நான் அமித்ஷாவை மதிக்கிறேன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நான் பதவியில் இருந்தபோது புல்வாமா மற்றும் விவசாயிகள் போராட்டம் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் எழுப்பினேன். புல்வாமா விவகாரம் நடந்த அன்றே நான் அதை எழுப்பினேன். ஆனால், நான் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் சத்யபால் மாலிக் கூறினார்.
பா.ஜ.க அரசு மறைக்க வேண்டும் என எதையும் செய்யவில்லை என்று அமித்ஷா கூறினார். “நம்மை விட்டுப் பிரிந்த பிறகு யாரேனும் தங்கள் அரசியல் நலன்களுக்காக ஏதாவது பேசினால், அது மக்களாலும் ஊடகங்களாலும் மதிப்பிடப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் பதவியில் இருந்து வெளியேறி, குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, அந்த குற்றச்சாட்டுகளின் மதிப்பை மதிப்பீடு செய்ய வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
குற்றச்சாட்டுகளை முன்வைத்த சில நாட்கள் கழித்து, சத்யபால் மாலிக்கை ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்தது என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, “அரசாங்கத்தை விமர்சித்ததால் அவர் சி.பி.ஐ-யால் அழைக்கப்பட்டார் என்பது உண்மையல்ல. எனக்குத் தெரிந்தவரை, அவர் அழைக்கப்படுவது இது மூன்றாவது முறை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறாரோ… என்ன ஆதாரம் திரட்டப்பட்டதோ… அதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.” என்று கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ தனக்கு சம்மன் அனுப்பியதாக சத்யபால் மாலிக் வெள்ளிக்கிழமை கூறினார்.
சத்யபால் மாலிக்கை ஆளுநராக நியமிப்பதில் அரசாங்கம் தவறான முடிவு எடுத்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, “அவர் நீண்ட காலமாக பாஜகவில் இருக்கிறார். நான் தேசிய அரசியலுக்கு வருவதற்கு முன்பே ராஜ்நாத் சிங்கின் கீழ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருந்தார். எனது அணியிலும் அவர் இருந்துள்ளார். அது நடக்குது… ஒரு செலக்ஷன் நடந்துச்சு… எப்போதாவது யாராவது மாறினால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்.
பிப்ரவரி 14, 2019-ல் புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பிறகு அவர் சுட்டிக்காட்டியதாகக் கூறப்படும் சில குறைபாடுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கேட்டுக் கொண்டதாக சத்யபால் மாலிக் சமீபத்தில் கூறினார். ஆகஸ்ட் 2018 முதல் அக்டோபர் 2019 வரை ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக், தி வயர் பத்திரிகைக்கு கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், சாலை வழியாக செல்லும் தனது பாதுகாப்புப் பணியாளர்களை அழைத்துச் செல்ல சி.ஆர்.பி,எஃப் கோரும் ஐந்து விமானங்களை வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்தது. இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்கள் கான்வாயில் சாலை வழியாக செல்லும்போது பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலுக்கு இலக்கானார்கள்” என்று கூறினார்.
யூனியன் பிரதேசத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக சி.பி.ஐ தன்னை அழைத்ததாக சத்யபால் மாலிக் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) கூறினார். அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இது. இந்த விவகாரத்தில் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சதயபால் மாலிக் புகார் கூறியதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. “சி.பி.ஐ அதிகாரிகள் என்னை அழைத்து, இந்த நாட்களில் நான் டெல்லியில் இருக்கப் போகிறேனா என்று கேட்டார்கள். நான் ஏப்ரல் 23-ம் தேதி டெல்லிக்கு வருவேன் என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் திட்டங்கள் குறித்து சில விளக்கங்களை பெற விரும்புகிறார்கள். அதற்காக நான் அக்பர் சாலையில் உள்ள அவர்களின் விருந்தினர் மாளிகைக்கு செல்ல வேண்டும்” என்று சத்யபால் மாலிக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
இந்த பேட்டியின் போது, அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் எம்.பி.யாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தனது இல்லத்தில் இருந்து வெளியேறியது குறித்து அமித்ஷா பேசினார். “ஓ.பி.சி-களை அவமரியாதை செய்யுமாறு ராகுல் காந்தியிடம் நாங்கள் கேட்கவில்லை. அதை அவரது ஆலோசகர் செய்தார். நாம் யாரையும் தண்டிக்க முடியாது. மன்னிப்பு கேட்காதது அவர் எடுத்த முடிவு. அரசாணையை கிழித்தெறிந்தவர் அவர். எனவே இப்போது அவர் சட்டத்தின் தவறான முடிவில் இருக்கும்போது. அவர் பாதிக்கப்பட்டவராக கூறக் கூடாது. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் நினைக்க வேண்டாம். எந்த குடும்பமும் சட்டத்திற்கு அப்பாற்பட்டது இல்லை. காங்கிரஸ் காலத்தில் வழக்குகளை முடிக்க முடியவில்லை. இந்த வழக்கில் தண்டனை கிடைத்திருக்கிறது” என்று அமித்ஷா கூறினார்.