Amit Shah Clarified Never asked for imposing Hindi: நாடு முழுவதும் பொதுவான மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், இன்று அவர் “நான் ஒரு போதும் மற்ற மொழிகளின் மீது இந்தியை திணிக்குமாறு கேட்கவில்லை. ஆனால், ஒருவரின் தாய்மொழியைத் தவிர பொதுவான இரண்டாவது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த வாரம் அமித்ஷா நாட்டின் பொதுவான மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து மத்திய அரசின் இந்தி மொழி திணிக்கும் முயற்சியை எதிர்ப்பதாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்பு குரல் எழுந்தது.
இந்தி தினத்தில் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் “இது ஒரு தேசிய பொறுப்பு. இந்தி விரிவடைந்து முன்னேறுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய முக்கியத்துவம் உண்டு. ஆனால் நிச்சயமாக மொத்த நாடும் ஒரே மொழியைக் கொண்டிருப்பது அவசியமானது. அது உலகில் தேசத்தின் அடையாளமாக மாறும். மொத்ஹ்ட நாட்டையும் ஒரே நூலில் இணைக்கக்கூடிய ஏதேனும் மொழி இருந்தால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியாக இருக்கும்”என்று கூறியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்தை பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாகூட வெளிப்படையாக எதிர்த்தது. செப்டம்பர் 20ஆம் தேதி தமிழகத்தில் மற்றொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தி மொழி பெரும்பான்மையான இந்தியர்களின் தாய்மொழி அல்ல என்றும் அது நாட்டை ஒன்றிணைக்கிறது என்ற அவரது கூற்று அபத்தமானது என்றும் கூறினார்.
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்தி திணிப்பை எதிர்த்ததோடு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட தமிழுக்கான போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்று கூறினார்.
இந்நிலையில், “நான் ஒருபோதும் பிற பிராந்திய மொழிகள் மீது இந்தி திணிக்கக் கேட்கவில்லை. ஒருவரின் தாய்மொழிக்குப் பிறகு இந்தி இரண்டாவது மொழியாகக் கற்க மட்டுமே கோரியிருந்தேன். நானே இந்தி பேசாத மாநிலமான குஜராத்தில் இருந்து வருகிறேன். சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துளார்.