மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்ந்து, கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தேசிய அளவில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிற்கான முதற்கட்ட அறிகுறி தென்பட்டதால், தாமாகவே முன்வந்து கொரோனா சோதனை செய்துகொண்டேன், அதில் கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. இருந்தபோதிலும் நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன், என்னை சமீபத்தில் சந்தித்த அனைவரும், கொரோனா சோதனை செய்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக, மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 5.30 மணியளவில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 மையங்களை சமீபத்தில் ஆய்வு செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, கொரோனா பாதிப்பிற்கு உள்ளான முதல் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவார். இவர் தற்போது சிகிச்சைசக்காக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமித் ஷாவை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள் இருந்ததால் சோதனை செய்துகொண்டதில் கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. தான் நலமுடன் இருக்கிறேன், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீபத்தில் என்னை சந்தித்த அனைவரும், கொரோனா சோதனை மேற்கொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு எடியூரப்பா, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டிருந்த நிலையில், அதுதொடர்பான கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், அமித் ஷா கூறியதாவது, அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு மட்டுமல்லாது, தனிநபர் இடைவெளியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லத்தில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சில மாதங்களாக தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வெப்பநிலை சோதித்தல், ஆரோக்கிய சேது செயலி மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடியோ கான்பரன்ஸ் முறையிலான கூட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டுமான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், அதில் அமித் ஷா பங்கேற்பாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை.
அமித் ஷா, கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
கடந்த வாரத்தில் அமித் ஷாவை நேரில் சந்தித்துள்ள, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோ, சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தான் கடந்த வாரம் அமித் ஷாவை சந்தித்தேன், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுரைப்படிஎனது குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். விரைவில் அன்றாடப்பணிகளை மேற்கொள்வேன் என்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை எம்பியும் இந்திய கலாச்சார உறவு கவுன்சில் தலைவருமான வினய் சஹஸ்ரபுத்தே, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, கலாச்சார உறவு தொடர்பான நிகழ்ச்சியில் அமித் ஷாவுடன் பங்கேற்றிருந்தார். மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது சுயதனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், தனிமைப்படுத்திக்கொண்டிருக்குமாறு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மட்டுமல்லாது, அமித் ஷாவை, கடந்த சில நாட்களில், நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி, மேற்குவங்க பாரதிய ஜனதா பிரமுகர் கைலாஷ் விஜய்வர்கியா, ஹரியானா மாநில பா.ஜ., தலைவர் ஓ பி தங்கார் மற்றும் குஜராத் பாரதிய ஜனதா கட்சி தலைவர் சி ஆர் பாட்டீல் உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர்.
ஆகஸ்ட் 1ம் தேதி பால கங்காதர திலகரின் 100வது நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற வெப்மினாரில், அமித் ஷா உடன். மாநிலங்களவை எம்பி சஹஸ்ரபுத்தே, திலக் மகாராஷ்டிர வித்யாபீடத்தின் திலீப் திலக், மகாராஷ்டிரா எம்எல்ஏ முக்தா திலக், டெக்கான் கல்வி நிறுவன தலதவர் சரத் குந்தே உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
மேற்குவங்க அரசியல் நிலவரம் குறித்து, அமித் ஷா உடன், வினய் வர்கியா ஆலோசனை நடத்தியிருந்தார், இந்த கூட்டத்தில், உள்துறை செயலர் அஜய் பல்லா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
ஜூலை 23ம் தேதி, மத்திய இணை அமைச்சர் பிரலாத் ஜோஷி இல்லத்தில் நடைபெற்ற மரம் நடுவிழாவில் அமித் ஷா பங்கேற்றிருந்தார். அன்றைய தினமே, அமித் ஷா, குஜராத் மற்றும் ஹரியானா கட்சி தலைவர்களை சந்தித்துப்பேசியிருந்தார்.
ஜூலை 24ம் தேதி குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்ற அமித் ஷா, 100 பேருக்கு உதவிகளை வழங்கினார். அப்போது அவருடன் காதி மற்றும் கிராம சிறுதொழில்கள் துறை தலைவர் வி கே சக்சேனா உடனிருந்தார்.
அரசியல் தலைவர்கள் நலம் விசாரிப்பு
அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் உடல்நலம் பெற ராகுல் காந்தி, சிதம்பரம் , தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளனர்.
ராகுல்காந்தி டுவீட் :“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!”
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் : அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் விரைவில் உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறேன்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி : அமித் ஷா, அவரது குடும்பத்தினர் விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் அமித் ஷா விரைவில் உடல்நலம் பெற டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில், நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை , மத்திய அமைச்சர் அமித் ஷா, தொடர்ந்து கண்காணித்து வருகிறார். லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் ஜூன் 15ம் தேதி அமித் ஷா அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். ஜூன் 27ம் தேதி, சத்தார்பூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்துவைத்தார். ஜூலை 5ம் தேதி, விமானநிலையம் அருகே, டிஆர்டிஓ வளாகத்தில் 250 ஐசியு படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை, அமித் ஷா திறந்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.