சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடல் சோர்வு, உடல் வலி காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " கோவிட்க்குப் பிந்தைய மருத்துவ பராமரிப்புக்காக அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் இருந்தவாறு தனது பணிகளை மேற்கொள்கிறார்,”என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை உறுப்பினரான அமித் ஷா முன்னதாக, குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 14ம் தேதி, அமித் ஷாவுக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை (நெகட்டிவ்) என்பது உறுதியானது. மருத்துவர்களின் அறிவுரையின் படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அமித் ஷா, சுதந்திர திருநாளில் தனது இல்லத்தில் இருந்தவாறு தேசியக் கொடியை ஏற்றினார்.
கொரோனா நெகட்டிவ் குறித்து தனது ட்விட்டரில் , “ இன்று எனக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது . நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். என்னையும், என் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வேன்” என்று தெரிவித்தார்.
55 வயதான அமித் ஷாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது தனது ட்விட்டரில்"கொரோனா தொற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை உணர்ந்தவுடன், நான் எண்ணை பரிசோதித்தேன். பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது. இருப்பினும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், ”என்று அமித் ஷா தெரிவித்தார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார் என்று ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil