நல்லாட்சி என்பது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும், உள்ளூர் நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (செவ்வாயன்று) தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் பேசினார். டெல்லியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சிறந்த ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டது. புதுமை மற்றும் சிறந்த நிர்வாகத்திறனுக்காக 18 நபர்களுக்கு அமித்ஷா விருது வழங்கினார்.
நல்லாட்சி மாதிரிகள் என்பது வரிசையில் உள்ள கடைசி நபரை சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். இது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், ஊழலற்றதாகவும், வெளிப்படையானதாகவும், பொறுப்புணர்வுடனும், உணர்திறன் மிக்கதாகவும், புதுமையானதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும். இது பிரச்சினைகளின் வேரைத் தாக்கி, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.

“நல்லாட்சிக்கான திறவுகோல் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக் கொள்கை என்று பிரதமர் நரேந்திர மோடி நம்புகிறார். நல்லாட்சிக்கான கொள்கைகளை வெளியில் இருந்து எடுக்க கூடாது. நமது சூழ்நிலைக்கு ஏற்பவும், மக்களின் நிலையை மதிப்பீடு செய்த பிறகு நாமே மாதிரிகளை உருவாக்க வேண்டும். 2-10 கோடி மக்கள் தொகை கொண்ட வேறு ஒரு நாட்டில் இருந்து மாதிரிகளைப் பின்பற்றுவது நம் நாட்டிற்கு சரியாக இருக்காது. நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் மீது திணிக்க முயன்றால், நாம் தோல்வியடைவோம். மேலும் இதற்கான சிந்தனை செயல்முறை அடிமட்டத்தில் இருந்து தொடங்கி உச்சத்தை அடைய வேண்டும். சிந்தனையில் தொடக்கம் சிறிய பரிந்துரைகளையும் ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

விருதுகளை வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமித்ஷா, அங்கீகாரம் உங்களை மனநிறைவடையச் செய்து விடக்கூடாது என்று கூறினார். தொடர்ந்து, மேலும் வளர, முன்னோக்கிச் செல்ல இது ஒரு உந்துதலாக கருதுங்கள். உங்கள் கனவு உங்களை உறங்க விடச் செய்யக்கூடாது. எனவே பல ஆண்டுகளாக உங்களை தூங்க விடாத விஷயங்களைப் பற்றி கனவு காணுங்கள். கனவு உங்களைச் சார்ந்ததாக மட்டுமல்ல மற்றவர்களையும் சார்ந்ததாக இருக்க வேண்டும். தேசத்திற்காகவும், மற்றவர்களுக்காகவும் கனவு காண்பதில் திருப்தி இருக்கும் என்று கூறினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான விவேக் கோயங்கா பேசுகையில், “அமித்ஷா தனது உரையில், நல்லாட்சி என்பது “வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான திறவுகோல்” என்று கூறினார். ஜனநாயகத்தில் அரசியல் சாசனத்தின் சாரத்தை அடிமட்டத்துக்கு எடுத்துச் செல்ல இயலாது. அனைவருக்கும் சம வாய்ப்பு, சமமான முன்னேற்றம் ஆகியவற்றைக் கற்பனை செய்யும் இந்திய அரசியலமைப்பு, மாவட்ட ஆட்சியர் மட்டத்தில் நல்லாட்சியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றிபெற முடியும் ” என்றார்.

விருதுகளுக்குப் பின்னால் உள்ள கருத்து மற்றும் யோசனையைப் பற்றி ஷா குறிப்பிடுகையில், ராம்நாத் கோயங்காவின் காலத்திலிருந்தும் மற்றும் பிரிட்டிஷ் ராஜ் காலத்திலும் கூட, இந்தியன் எக்ஸ்பிரஸ் அதன் ஸ்தாபனத்திற்கு எதிரான பத்திரிகைக்கு பெயர் பெற்றது என்று கூறினர். மேலும், அரசாங்கத்தின் தவறுகளையோ குறைகளையோ அம்பலப்படுத்துவது நல்லது. ஆனால் நல்ல பணிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது சமுதாயத்தை ஊக்குவிப்பதோடு, நல்ல வேலையைச் செய்பவர்களையும் ஊக்குவிக்கும் என்றார்.
எமர்ஜென்சி காலத்தில், “இந்தியாவின் ஜனநாயகத்தின் போக்கை உண்மையின் திசையில் திருப்பியதில் ஜெயப்பிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக், ராம்நாத் கோயங்கா மற்றும் ராஷ்டிர கவி தினகர் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்” என்று அமித்ஷா கூறினார்.
அமித்ஷா மேலும் கூறுகையில், அரசாங்கம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. மோடி அரசு மக்களுக்கு துன்பப்படும் வளர்ச்சி கொள்கைகளை உருவாக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்யும் கொள்கைகளை உருவாக்குகிறது. நாங்கள் ஜிஎஸ்டியை கொண்டு வந்தபோது சிலர் அதை எதிர்த்தனர். நாங்கள் DBT (Direct Benefit Transfer) கொண்டு வந்தபோது, அது எதிர்க்கப்பட்டது. இது இயற்கையானது. சிலர் அதனால் பாதிக்கப்பட்டனர். ஆகவே எங்களின் முடிவுகள் கசப்பாக இருந்திருக்கலாம் ஆனால் அவை மக்கள் நலனுக்காகவே இருந்தன. கொள்கைகளை உருவாக்கும் போது
வாக்கு வங்கிகளைப் பற்றி சிந்திப்பதில்லை. பிரச்சனைகளை தீர்ப்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் ” என்றார்.