மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன சில வாரங்களுக்குப் பிறகு, அவருக்கு இன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து இன்று அவர் மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு (55) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 2ம் தேதி அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், அவர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் மத்திய அமைச்சரானார்.
இந்த செய்தியை ட்விட்டரில் தெரிவித்த அமித்ஷா, தன்னுடன் தொடர்பு கொண்டிருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் சுய தனிமைப்படுத்திக்கொள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் நான் பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவு மீண்டும் தொற்று உள்ளது என்று வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்து தங்களை தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் ” என்று அமித்ஷா தெரிவித்தார்.
சிசிச்சைக்குப் பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்தது. ஆனாலும், அவர் சோர்வாக இருப்பதாகவும் உடல் வலி காரணமாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகான சிகிச்சைக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தது. மேலும், அவர் நல்ல நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனையில் இருந்தபடியே அவர் தனது பணிகளை செய்வார் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து இன்று அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"