நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, சீனாவுடனான பதட்டங்களும் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு 2 போர்களை வெல்லும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா 2 போர்களை வெல்லப்போகிறது” என்று அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியப் பிரதேசத்தில் சீன துருப்புகள் இருப்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, இது குறித்து கருத்து தெரிவிக்க இது சரியான நேரம் அல்ல என்று வலியுறுத்திய அமித்ஷா, விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தேவை ஏற்பட்டால் நான் பதிலளிப்பேன் என்று கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், மேலோட்டமான எண்ணத்துடன் அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அமித்ஷா கடுமையாக சாடினார்.
“ஆமாம், நாம் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை கையாளும் திறனைக் கொண்டுள்ளோம். ஆனால், இதுபோன்ற ஒரு பெரிய அரசியல் கட்சியின் முன்னாள் தலைவர் பிரச்சினைகளின் போது மேலோட்டமான அரசியல் செய்யும் போது அது வேதனையளிக்கிறது” என்று அமித்ஷா கூறினார்.
அவரது ஹேஷ்டேக்கை பாகிஸ்தான் மற்றும் சீனா முன்னெடுத்துச் சென்றதால் அவரும் காங்கிரசும் சுய பரிசீலனை செய்ய வேண்டிய விஷயம். சீனாவும் பாகிஸ்தானும் விரும்புவதை நீங்கள் சொல்கிறீர்கள். இந்த நெருக்கடி நேரத்தில், ராகுல் காந்தியின் முந்தைய கருத்துக்களில் ஒன்றைக் குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி பிரதமரை சுரேந்தர் மோடி என்று அழைத்தார் என்று கூறினார்.
சரியான கட்டுப்பாட்டு கோட்டில் (எல்.ஏ.சி) எந்தவிதமான ஊடுருவலும் இல்லை என்று பிரதமர் கூறியதை அடுத்து ராகுல் காந்தி அரசாங்கத்திற்கு எதிரான தனது விமர்சனத்தைக் கூர்மைப்படுத்தினார்.
எல்லைப் பிரச்சினையில் நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசாங்கம் தயார்நிலையில் இருப்பதாகக் கூறிய அமித்ஷா, “1962ம் ஆண்டு போரிலிருந்து இப்போது வரை விவாதிப்போம். வலுவான விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோய் குறித்து அமித்ஷா கூறுகையில், “தொற்றுநோய்க்கு எதிராக இந்திய அரசு நன்றாகப் போராடியது. ராகுல் காந்திக்கு என்னால் ஆலோசனை வழங்க முடியாது. அது அவருடைய கட்சித் தலைவர்களின் வேலை. சில பேர் கோணல் புத்தியுடையவர்களாக இருக்கிறார்கள். சரியான விஷயங்களைக்கூட தவறாகப் பார்க்கிறார்கள். கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா நன்றாகப் போராடியது. உலகத்துடன் ஒப்பிடும்போது நம்முடைய புள்ளிவிவரங்கள் மிகச் சிறப்பாக உள்ளது” என்று அவர் கூறினார்.
புது டெல்லியில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் இல்லை என்று கூறிய அமித்ஷா, “டெல்லியில் இன்று சமூகப் பரவல் நிலை இல்லை என்பதால் யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்று அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும், அவர் தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.
“இதில் ஒருங்கிணைப்பு இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும் தொடர்பு வளையத்தில் இருக்கிறார். முடிவெடுப்பதிலும் அவர் ஈடுபட்டுள்ளார். சில அரசியல் அறிக்கைகள் வெளியிட்டிருக்கலாம். ஆனால், முடிவெடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை” என்று அமித்ஷா கூறினார்.
மேலும், “டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தொடர்பான நிலைமை மிகவும் மோசமானது. 350க்கும் மேற்பட்ட உடல்கள் இறுதி சடங்குகளுக்காக நிலுவையில் இருந்தன. இறுதிச் சடங்குகளை இரண்டு நாட்களுக்குள் முடிக்க முடிவு செய்தோம். இன்று, இறுதி சடங்குகளுக்கு எந்த உடலும் விடப்படவில்லை. இப்போது, இறுதிச் சடங்குகள் ஒரே நாளில் நடத்தப்படுகின்றன” என்று அமித்ஷா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"