1949 மதரீதியான பிரிவினையின் கட்டாயம் தான் இந்த மசோதா: அமித் ஷா

அமித் ஷா : அரசியலமைப்பின் 14-வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) முழுமையானதல்ல , நியாயமான வகைப்பாடு (reasonable classification) கொள்கையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

நேற்று நள்ளிரவின் போது , மக்களவையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நிறைவேறியது .  ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சூடான விவாதத்தின் போது  உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1947ம் ஆண்டு மதத்தின் அடிப்படையில் நாட்டின் பிரிவினையை முன்னெடுத்த  காங்கிரஸின் செயல்பாட்டினாலே இந்த மசோதாவை கொண்டுவர வேண்டிய கட்டாயம் வந்தாதாக தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட சட்டம் “வகுப்புவாதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் ” என்று பிரதான எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமித் ஷா, “இந்த மசோதாவை நாங்கள் ஏன் கொண்டு வர வேண்டியிருந்தது? சுதந்திரத்தின் போது, ​மதத்தின் அடிப்படையில் இந்திய நாட்டை  காங்கிரஸ் பிரிக்கவில்லை என்றால், இந்த மசோதா தேவைப்படாது.” என்றார்.

இந்த மசோதா செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.02 மணிக்கு நிறைவேறியது.மசோதாவிற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

 

வாக்களிப்பதற்கு முன்னர், அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிம் கட்சித்  தலைவர் அசாதுதீன் ஒவைசி, இந்த மசோதா நாடு முழுவதும் குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டை (என்.ஆர்.சி ) செயல்படுத்துவதற்கான முன்னோடி(காரணி ) என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமித் ஷா “நாங்கள் தேசிய பதிவேட்டிற்கு எந்த பின்னணியும்  அமைக்க தேவையில்லை. என்.ஆர்.சி செயல்முறையை மறைக்கவும் தேவையில்லை. நாங்கள் நாடு முழுவதும் என்.ஆர்.சி.யைக் கொண்டு வருவோம்… ஒரு ஊடுருவல்கார்கள் கூட காப்பாற்றப்படமாட்டார்கள், ”என்றார் ஷா.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் அடித்தளம் ‘ இந்து ராஷ்டிரா’ என்று எதிர்க் கட்சிகளின் கருத்துக்கு பதிலளித்த அமித் ஷா, ” இந்திய அரசியலமைப்பு ஒரு இந்து ராஷ்டிராவாக மாறப்போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள், ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்துவிட்டது. 1951ல், 84 சதவீத இந்துக்கள் இருந்தனர், இப்போது அது 79 சதவீதமாக உள்ளது. 1951 ம் ஆண்டில், முஸ்லிம்களின் மக்கள் தொகை 9.8 சதவீதமாக இருந்தது, இன்று அதன் எண்ணிக்கை  14.23 சதவீதம். மதத்தின் அடிப்படையில் நாங்கள் எந்த பாகுபாடும் செய்யவில்லை. அது நடக்காது,”என்றார்

மத துன்புறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறி ‘பயங்கரமான’ வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதே முன்மொழியப்பட்ட சட்டத்தின் ஒரே நோக்கம் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறவில்லை  என்று வலியுறுத்திய உள்துறை அமைச்சர்,மசோதா  தொடர்பாக 140 பிரதிநிதிகளுடன் ( தொடர்ந்து 119 மணி நேரங்களில்) ஆலோசனை நடத்தியதாக கூறினார். இந்த மசோதா மக்களுக்கு உரிமையை வழங்குகிறது, மக்களிடம் இருந்து  உரிமையை  பறிக்கவில்லை என்றும் விவரித்தார்

முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனத்தை எதிர்கொண்ட ஷா, மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த ஒரு “சஜ்ஜன்” (நல்ல அர்த்தமுள்ள) முஸ்லீம் குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், அது பரிசீலிக்கப்படும் என்றார். ஆனால், இந்த மசோதா அந்த வகையான பரிசீலனை பேசவில்லை என்றும் தெரிவித்தார். மியான்மர் ரோஹிங்கியா பற்றி  குறிப்பிடுகையில், வங்கதேசம் வழியாக வந்ததால் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது என்று கூறினார்.

கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவையால் தெளிவுபடுத்தப்பட்ட இந்த மசோதா, 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முன்பு குறிப்பிட்ட மூன்று நாடுகளில் இருந்து  இந்தியாவுக்குள் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகளுக்கு  இந்திய குடியுரிமையை வழங்க முற்படுகிறது. இந்த மசோதா முஸ்லிம் மக்களை விட்டுவிடுகிறது.

 

உள்துறை அமைச்சரின் கூற்றுப்படி, குறிப்பிடப்பட்டுள்ள ஆறு சமூகங்கள் மூன்று அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படுகின்றன, இதனால் இந்த மசோதா அவர்களுக்கு “உடன்பாட்டில் பாகுபாடு “(Positive Discrimination) வழங்குகிறது. 1950 ல் நேரு-லியாகத் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சிறுபான்மையினர் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டனர், ஆனால் பாகிஸ்தானில் …… அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். பாகிஸ்தான், பங்களாதேஷில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்று சொல்கிறீர்களா? அது ஒருபோதும் நடக்காது……”என்றார் அமித் ஷா.

மூன்று நாடுகளில் சிறுபான்மையினரை துன்புறுத்திய சம்பவங்களை விவரித்து பேசும் போது அமித் ஷா, “ஒரு அகதிக்கும், ஊடுருவாதிகளுக்கும் இடையே  அடிப்படை வேறுபாடு உள்ளது. இந்த மசோதா அகதிகளுக்கானது. வாக்கு வங்கி அரசியல் காரணமாக, உங்கள் (எதிர்க்கட்சியின்) கண்களும் காதுகளும் மூடப்பட்டிருந்தால், தர்போதாவது அதை திறங்கள். எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல், ரயில் பாதையில் தங்கியிருக்கும் கோடிக்கனக்கான மக்கள் நரக வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்… (பிரதமர்) நரேந்திர மோடியின் காரணமாக, இந்த மக்கள் ஒரு தங்க விடியலைக் காணப் போகிறார்கள்”என்றார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய நாடுகள் என்று குறிப்பிட்ட ஷா, “இதன் காரணமாக, இந்த நாடுகளில் சிறுபான்மையினருக்கு நீதி கிடைக்க வாய்ப்பு குறைகிறது.” என்று தெரிவித்தார்.

மற்ற வடகிழக்கு மாநிலங்களைப் போலவே, மணிப்பூருக்கும்  மசோதாவின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பாக மணிப்பூர் ஏற்கனவே ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது, இன்னும் அந்த மசோதா  மத்திய அரசின் ஒப்புதலை வாங்கவில்லை. எனவே, இந்த மசோதா ‘இன்னர் லைன் பெர்மிட்’ உடைய அனைத்து மாநிலங்களையும் விளக்கியுள்ளது.

அமித் ஷாவிவாதத்தின் போது, அரசியலமைப்பின் 14-வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) முழுமையானதல்ல என்றும், சில சமூகங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் கடந்த காலங்களில் “நியாயமான வகைப்பாடு” (reasonable classification) கொள்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன  என்றும் கூறினார்.

“இந்த மசோதா அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவையும் மீறவில்லை. தெரிந்துகொள்ள ஆர்டிகல் 11ஐ முழுமையாகப் படியுங்கள். மக்கள் சம உரிமைக்கான உரிமை பற்றி பேசும் ஆர்டிகல் 14ன் கீழ், நியாயமான வகைப்பாடு மூலம், குடியுரிமை குறித்த சட்டத்தை கொண்டு வர முடியும், இந்த மசோதா ஆர்டிகல் 14வது பிரிவை மீறவில்லை, ஏனெனில் எந்தவொரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு அல்லாமல், அனைத்து சிறுபான்மையினரையும் இந்த மசோதா பேசுகிறது. நாங்கள் இந்துக்களுக்காகவோ அல்லது பார்சிகளுக்காகவோ இதைச் செய்திருந்தால், சமத்துவ உரிமையை மீறுவதாக  இருந்திருக்கும்  என்று அவர் கூறினார்.

1947 பிரிவினை, 1971 வங்கதேச யுத்தம், இலங்கை இனக்கலவரம் , இடி அமீனின் ஆட்சியால் உகாண்டாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அகதிகள் முந்தைய  நிகழ்வுகளை மேற்கோள் காட்டிய பேசிய உள்துறை அமைச்சர் மற்ற நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி சட்டவிரோதமாக  புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை  வழங்குவது ஒன்றும் புதிதில்லை என்றும் கூறினார்.

இஸ்லாமியர்களைப் பற்றி ஷா குறிப்பிடுகையில், “இந்த மூன்று நாடுகளிலிருந்தும், ஒரு முஸ்லீம்… ஒரு சஜ்ஜன் முஸ்லீம்… தற்போதுள்ள சட்டங்களின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், அது கருதப்படும். ஆனால், இந்த மசோதாவின் கீழ் குடியுரிமை பெற முடியாது, ஏனெனில் அந்த நாட்டில் அவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப்படவில்லை” என்றும் கூறினார்.

ஏன் “இஸ்லாமியர்களை வெறுத்தீர்கள் ” என்ற ஒவைசியின் கேள்விக்கு பதிலளித்த ஷா,”எங்களுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு இல்லை. ஆனால் நீங்கள் (ஓவைசி) அதைத் தூண்ட வேண்டாம். இந்த மசோதாவுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்றார்.

 

‘இலங்கையில் இருந்து அகதிகளை சேர்க்கவில்லை’ என்று தென்னிந்திய எம்.பி.க்களின் விமர்சனம் குறித்து  அமித் ​​ஷா பதில் கூறுகையில் ,“வெவ்வேறு காலங்களில், பல்வேறு பிரிவு மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 1949ம் ஆண்டு பிரிவினையின் போது , இந்தியாவுக்குள் ​​வந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. 1964ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது இலங்கை  தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது… அந்த நேரத்தில், பங்களாதேஷ் , பாகிஸ்தான் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. எனவே,ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காகத் தான் இந்திய அரசின் குடியுரிமை தலையீடும் இருக்கும் . இந்த முறை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் அதைப் பெறுகிறார்கள் என்று பதில அளித்தார்.

மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்த அமித் ஷா, ” இந்த மசோதாவைப் பற்றி பயப்பட ஒன்றுமில்லை என்பதை உங்கள் மக்களிடம் சென்று சொல்லுங்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களுக்கும், தங்கியவர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உள்ளது என்பதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்றும் அமித் ஷா கூறினார்.

இந்த புதிய சட்ட மசோதா விதிகளின் கீழ், குடியுரிமை பெற தகுதியுடையவராக இருந்தால், முந்தைய குடியுரிமை நிபந்தனைகளை (அதாவது, பழைய குடியுரிமை சட்டத்தின் கீழ்) பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும் ,குடியுரிமை வழங்கப்படும்.

புதிய மசோதா மற்றும் தேசிய மக்கள் பதிவேடு  இரண்டு மீளமுடியாத அரசியல் ஆயுதம் என்று திரிணாமுல் காங்கிரசு எதிர்ப்பை , அமித் ஷா தாக்கி பேசுகையில், ” இல்லை இது ஒரு எளிய மசோதா. ஆனால் தங்கள் வாக்கு வங்கியில் ஊடுருவியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க விரும்புவோர் அதை ஒரு அபாயகரமாக உணரலாம். இந்த குடியுரிமையைப் பெறப் போகும் லட்சக்கணக்கான மக்கள் வங்காளிகள் என்பதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் குடிமக்களாக மாற விரும்பவில்லையா? எனப் பதில் அளித்தார்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close