/indian-express-tamil/media/media_files/2025/08/25/dhankar-amit-shah-2025-08-25-12-06-06.jpg)
ஆச்சரியம் அளிக்கும் விதமாக, தனது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், உடல்நலக் காரணங்களைச் சுட்டிக்காட்டி தன்கர் பதவி விலகியதாக அறிவித்தார். Photograph: (File Photo)
Jagdeep Dhankhar resignation: செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக, தன்கர் தனது தனிப்பட்ட உடல்நலப் பிரச்னைகள் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்தார் என்று அமித்ஷா தெரிவித்தார். “இதை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும், மேலும் இதை பெரிதாக்கி வேறு ஏதாவது காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யக் கூடாது” என்றும் அவர் கூறினார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ராஜினாமா செய்த தன்கர், அரசியலமைப்பின்படி தனது பதவிக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றினார் என்று அமித்ஷா தெரிவித்தார்.
“தன்கர் ஒரு அரசியலமைப்பு பதவியில் அமர்ந்திருந்தார். அவரது பதவிக் காலத்தில், அரசியலமைப்பின்படி அவர் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் தனது தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக ராஜினாமா செய்துள்ளார். இதை அதிகமாக ஊகித்து வேறு காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கக் கூடாது” என்று அமித்ஷா கூறினார்.
“தன்கரின் ராஜினாமா கடிதத்திலேயே தனது உடல்நலக் காரணங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த பதவிக் காலத்தை வழங்கியதற்காக அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்” என்றும் அமித்ஷா மேலும் கூறினார்.
தன்கர் எங்கு இருக்கிறார், அவரது ராஜினாமா குறித்த ஊகங்கள் பற்றி கேட்டபோது, அமித்ஷா, “உண்மை எது, எது உண்மை இல்லை என்பதற்கான விளக்கம் எதிர்க்கட்சிகள் சொல்வதைப் பொறுத்து அமைகிறது” என்று கூறினார்.
தனது ராஜினாமாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன், குடியரசுத் துணைத் தலைவர் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் "திட்டமிடப்படாத" சந்திப்பை நடத்தினார். இருப்பினும், இருவரின் அலுவலகத்திலிருந்தும் அவர்களின் பேச்சுவார்த்தை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தன.
செப்டம்பர் 9-ல் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: யார் போட்டியிடுகிறார்கள்?
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21-ம் தேதி முடிவடைந்தது.
ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர், அவருக்கு எதிராக நீதிபதி சுதர்ஷன் ரெட்டி சமூக நீதியின் பாதுகாவலராக எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தப்படுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.