இந்திய அரசின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பழம்பெரும் சோழ வம்சத்தைச் சேர்ந்த ‘செங்கோல்’ என்ற பழங்கால நினைவுச்சின்னம் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 970-கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் 4 மாடிகள் கொண்டது என்றும், 1224 எம்.பி.க்கள் அமரும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்குகள் அமைக்கப்படும் என்றும், கேண்டீன், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுள்ளது. இந்த பிரம்மாண்ட புதிய பாராளுமன்ற கட்டிடம் வரும் மே 28-ந் தேதி திறக்ககப்பட உள்ள நிலையில், இந்த திறப்பு விழாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துள்ளதாக என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர் கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு, ஜனாதிபதி திரௌபதியை “முற்றிலும் ஓரங்கட்டுவது” போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், ஜனாதிபதியின் உயர் பதவியை அவமதிப்பதாகவும், அரசியலமைப்பின் எழுத்து மற்றும் உணர்வை மீறுவதாகவும் உள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில்,
இந்தப் பிரச்சினையை நாம் அரசியலாக்கக் கூடாது… மக்கள் எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கட்டும், எதிர்வினையாற்றட்டும். பழம்பெரும் சோழ வம்சத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தங்க முலாம் பூசப்பட்ட ‘செங்கோல்’ என்ற பழங்கால நினைவுச்சின்னம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும். செங்கோல் சுதந்திரம் மற்றும் மதசார்பற்ற ஆட்சியின் உணர்வைக் குறிக்கிறது. பண்டித ஜவஹர் லால் நேரு ஆகஸ்ட் 14, 1947 அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் தமிழ்நாட்டின் ஆதினம் மூலம் செங்கோலை ஏற்றுக்கொண்டார். இது ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அறிகுறி.
“நாடாளுமன்றத்தை விட செங்கோலுக்கு சிறந்த இடம் இல்லை என்று எங்கள் அரசாங்கம் நம்புகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோலை வைப்பார். மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் இந்த கட்டிடத்தை கட்டும் பணியில் ஈடுபட்ட 60,000 தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவிப்பார். புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தை நவீனத்துவத்துடன் இணைக்கும் அழகான முயற்சிதான் நாடாளுமன்றக் கட்டிடம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விழா சோழ வம்சத்திற்கு முந்தைய காலக்கட்டத்தை குறிக்கும் என்று கூறியுள்ள அமித்ஷா, அந்த காலக்கட்டத்தில் ஒரு மன்னரிடமிருந்து இன்னொருவருக்கு அதிகாரம் பரிமாற்றம் செய்யப்படும்போது “புனித செங்கோல் விழா” என்று நடத்தி அதிகாரத்தை மாற்றுவார்கள். அந்த முறையை நினைவூட்டும் வகையில் தான் தற்போது செங்கோல் வைக்கப்பட் உள்ளது. இந்த செங்கோல் திருவாவடுதுறை மடத்தால் வழங்கப்பட உள்ளது. சென்னையிலுள்ள வும்மிடி பங்காரு செட்டி என்ற பிரபல நகைக்கடை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி மட்டும் ஒருமனதாக பாராளுமன்ற கட்டிடத்தை திறந்துவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் இந்த விழாவில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கூட்டறிக்கையில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா யுபிடி, சமாஜ்வாதி, சிபிஐ, ஜேஎம்எம், கேரள காங்கிரஸ் (மணி), ஆர்ஜேடி, டிஎம்சி, ஜேடி(யு), என்சிபி, சிபிஐ (எம்), இந்திய முஸ்லிம் லீக், தேசிய மாநாடு, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என 19 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“