ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கோவிட் தடுப்பூசி இயக்கம் முடிந்ததும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை, மேற்கு வங்கத்தில் பாஜகவின் செயல்பாடுகள் மற்றும் அமைப்புப் பிரச்னைகள் தொடர்பான விஷயங்களை எடுத்துரைப்பதற்காக, செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் அவரைச் சந்தித்தார். அப்போது அமித்ஷா இந்த உறுதிமொழியை அளித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு, கோவிட் தடுப்பூசி மூன்றாவது தவணை செலுத்தும் பணிகள் முடிந்ததும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சி.ஏ.ஏ சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக சுவேந்து அதிகாரி கூறினார்.
அரசாங்கம் முன்னெச்சரிக்கை கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியை ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. இந்த பணி ஒன்பது மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவை சந்தித்த சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுடன் (டிஎம்சி) பாஜகவின் தற்போதைய அரசியல் சண்டை தொடர்பான பிற விஷயங்களையும் எடுத்துரைத்தார். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய 100 திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலை கொடுத்துள்ளேன் என்று சுவேந்து அதிகாரி கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) டிசம்பர் 11, 2019 -இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மறுநாள் அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் எழுந்தாலும் மத்திய அரசு இன்னும் சட்டத்திற்கான விதிகளை உருவாக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"